தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று (09.01.2023) ஆளுநர் உரையுடன் துவங்கியது. இந்த பேரவை கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நேற்றைய நிகழ்வில் அரசு கொடுத்திருந்த உரையில் சில வார்த்தைகள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழக முதல்வர் உரையாற்றிக்கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் வெளியேறியதும் சர்ச்சையானது.
நேற்று திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநருக்கு எதிராகக் கோஷமிட்டு பேரவையை விட்டு வெளியேறினர். இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை மாவட்டச் செயலாளர் குமரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், ‘அண்ணா சூட்டிய பெயர் தமிழ்நாடு; அதை மாற்றச் சொல்ல நீ யாரு’, ‘ஆளுநரே வெளியேறு’ உள்ளிட்ட பதாகைகளை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநரின் உருவ பொம்மையை எரிக்க முற்பட்டனர். அப்போது அங்கிருந்த காவலர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுத்து உருவபொம்மை எரிப்பையும் தடுத்து நிறுத்தினர்.