
இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்காக 317 கோடி ரூபாய்க்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். குறிப்பாக, இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் முகாம்களில் பழுதடைந்த 7,469 வீடுகள் ரூ.231 கோடியில் புதிதாகக் கட்டித்தரப்படும், முதல் கட்டமாக 3,510 வீடுகள் கட்டுவதற்கு நடப்பாண்டில் 108 கோடியே 81 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும், முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் ஒதுக்கப்படும், பொறியியல் படிப்பு பயில்வதற்கு தேர்ச்சிபெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் விடுதி கட்டணத்தையும் அரசு ஏற்கும் என்பது உள்ளிட்ட நல உதவிகளை அறிவித்தார் ஸ்டாலின்.
இந்த நிலையில், தூத்துக்குடி எட்டையபுரத்திலுள்ள தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் அனைவரும் கனிமொழிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், "ஜூன் மாதம் 22-ந் தேதி எங்களின் வாழ்நிலையை அறிந்துகொள்வதற்காக எங்கள் முகாமிற்கு வந்தீர்கள். அப்போது, எங்களின் குறைகளை நீங்கள் கேட்டபோது, அனைத்துப் பிரச்சனைகளையும் எடுத்துக் கூறினோம்.

எங்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளையும், துயரங்களையும் கனிவுடன் கேட்டறிந்த நீங்கள், முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுச் சென்று எங்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக உறுதி தந்தீர்கள். அதன்படி, தற்போது எங்களின் குறைகளைத் தீர்த்து தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர நல திட்ட உதவிகளை அறிவித்துள்ளார் முதல்வர். இலங்கைத் தமிழர் முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரங்களுக்கு உதவிய தமிழக முதல்வர் அவர்களுக்கும், கனிமொழி எம்.பி. அவர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று கடிதம் எழுதியுள்ளனர்.