
தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா இன்று பொறுப்பேற்றார். ஆளுநர் மாளிகையில் முதல்வர் முன்னிலையில் டி.ஆர்.பி.ராஜாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தற்பொழுது புதிதாக பதவியேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிற்கான துறை மற்றும் சில அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியது.
தற்போது வெளியான தகவலின்படி டி.ஆர்.பி.ராஜாவுக்கு தங்கம் தென்னரசு வகித்து வந்த தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் வகித்து வந்த தொழில்நுட்பத்துறை நிதித்துறை அமைச்சராக இருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கவனித்து வந்த நிதித்துறை மற்றும் மனித வளத்துறை தங்கம் தென்னரசுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட நாசர் வகித்து வந்த பால்வளத்துறை மனோ தங்கராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துறை மாற்றம் செய்யப்பட்ட அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், ''கடந்த இரண்டு ஆண்டுகள் நிதி அமைச்சராக பணியாற்றியது என் வாழ்க்கையில் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன். தற்பொழுது உலக அளவில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையை ஒதுக்கியதற்கு நன்றி. தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் தமிழ்நாட்டை மீண்டும் முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவேன். புதிதாக நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசுவிற்கு வாழ்த்து. நம்பர் ஒன் துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.