Skip to main content

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது ஏற்கத்தக்கதல்ல; பேராசிரியர் கல்விமணி பேச்சு

Published on 18/05/2019 | Edited on 19/05/2019

 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தமிழ் பல்கலைக் கழக தொலைநிலைக்கல்வி மைய வளாகத்தில் உள்ள பெரியார்-அம்பேத்கர் நூலகத்தில் சனிக்கிழமை அன்று கல்வி சார் கருத்தரங்கம் நடைபெற்றது. 

 

தமிழக மக்கள் புரட்சிக் கழக தலைவர் அரங்க.குணசேகரன் கருத்தரங்கிற்கு தலைமை வகித்தார். மைய ஒருங்கிணைப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் வரவேற்றார்.  இதில் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றிய பேராசிரியர் கல்வி மணி கூறியதாவது: "கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பாடங்களையும் தாய்மொழியாகிய தமிழ் வழியிலேயே நடத்த வேண்டும்.

 

t


கடந்த ஆண்டு தமிழ் வழி சேர்க்கை தொடக்கப்பள்ளியில் 30 சதவீதம் ஆக குறைந்துள்ளது. தமிழக அரசும், தொடக்கக் கல்வித்துறையும் தான் இதற்கு காரணம்.   தமிழக அரசு ஆங்கில மோகத்தை ஊக்குவிக்கும் வகையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது ஏற்கத்தக்கதல்ல. இதனால் மாணவர்கள் தாய்மொழியை கற்காமல், ஆங்கில வழி மோகத்திற்கு அடிமையாகி தமிழை மறக்கும் நிலை ஏற்படும். தாய்மொழியில் கற்கும் மாணவர்களே எதையும் புரிந்து கற்க முடியும்.  

 

தமிழ்நாட்டில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்து, ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் 20 ஆண்டுகளில் தமிழ்மொழி மறக்கடிக்கப்பட்டு, ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து விடும். தமிழின் மொழி வளம், சொல்வளம், கருத்து வளம் இவைகள் அழிக்கப்படும்.  அரசே கல்வியையும், மருத்துவத்தையும் வழங்க வேண்டும். கல்வி தனியார் கையில் சென்றால் அது வணிகமயமாகி விடும்" என்றார். 

 

விழாவில்.. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் நரேந்திரன், பேராவூரணி எலும்பு முறிவு சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் துரை.நீலகண்டன் ஆகியோர் தமிழ் மொழியில் மருத்துவ நூல்களை எழுதியமைக்காக கருத்தரங்கில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

பேராசிரியர்கள் கோச்சடை, தமிழ்வாணன்,  தமிழறிஞர் சின்னப்பா தமிழர், தமிழறிஞர் அ.த. பன்னீர்செல்வம், ஆயர் த.ஜேம்ஸ்,  முனைவர் சுந்தரம்பாள், மற்றும் ஆறு. நீலகண்டன், சித.திருவேங்கடம், ஆர்.எஸ்.வேலுச்சாமி, ஆசிரியர் மோகன்,  தமிழ்த் தேசிய பாடகர் சீர்த்தி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக மருத.உதயகுமார் நன்றி கூறினார்.  

 

தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில், அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக விழிப்புணர்வு துண்டறிக்கை, ஊரகப் பகுதிகள் தோறும் பெற்றோர்களை சந்தித்து பரப்புரை செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது
            
 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் காட்டிய கறார்; ஓரங்கட்டப்பட்ட சீனியர் - யார் இந்த முரசொலி?

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Thanjavur Parliamentary Constituency Candidate murasoli Details

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த வகையில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் 20 ஆம் தேதி வெளியிட்டார். அந்த வேட்பாளர் பட்டியலில் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன், டி.ஆர். பாலு போன்ற திமுகவின் முக்கிய புள்ளிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுமுக வேட்பாளர்கள் 11 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை மேடையில் வெளியிட்ட மு.க. ஸ்டாலின், தஞ்சையில் முரசொலி என்ற வேட்பாளரை அறிமுகப்படுத்திவிட்டு, 'முரசொலியே அங்கே நிற்கிறது' என அழுத்தமாக கூறினார். அப்போதே அனைவரது கவனத்தையும் புதுமுக வேட்பாளர் முரசொலி பெற்றார். இந்த நிலையில், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிமுகமான முரசொலி, 9 முறை தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு அதில் 6 முறை எம்.பியாக தஞ்சையில் வெற்றிபெற்ற சீனியரான பழநிமாணிக்கத்தை ரேஸில் வீழ்த்தி வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

போட்டியிடும் தொகுதி மக்களுக்கே ஆச்சரியம் கொடுத்துள்ளார் புதுமுக வேட்பாளர் முரசொலி. தலைமை எப்படி அவரை தேர்ந்தெடுத்தது என்பது குறித்து தஞ்சை திமுகவினர் வட்டாரத்தில் பேசுகையில், பல தகவல்கள் கிடைத்தது. முன்னதாக தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு பழநிமாணிக்கம், முரசொலி, ராதிகா மணிமாறன், அஞ்சுகம் பூபதி, கலைவாணி மோகன் உள்ளிட்ட 24 பேர் விருப்ப மனுவை திமுக தலைமையிடம் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், நேர்காணலில் திமுக தலைமை முரசொலி மற்றும் ராதிகா மணிமாறனிடம்  மட்டும் எவ்வளவு பணம் தேர்தலுக்கு செலவு செய்வீர்கள் எனக் கேட்டு விவரம் பெற்றுள்ளனர். ஆனால், சீனியர் சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கத்திடம் எதுவும் கேட்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதுவே, சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கத்திற்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காது எனப் பேசுபொருளை உண்டாக்கியுள்ளது.

இப்படியிருக்கையில், முரசொலியோ தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்னே தொகுதிக்கு உட்பட்ட சில எம்.எல்.ஏக்களை சந்தித்து சீட் கிடைத்தால் ஆதரவு வேண்டும் என ஆசி பெற்றுள்ளார். இதனால், முரசொலி தான் தஞ்சை வேட்பாளர் என திமுகவினர் பரவலாகப் பேசியுள்ளனர். இந்த செய்தி அறிந்த சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் முகாமிட்டு மீண்டும் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தியுள்ளார். ஆனால், அவரை அழைத்துப் பேசிய திமுக தலைமை, இந்த முறை உங்களுக்கு சீட் இல்லை. கட்சி அறிவிக்கும் நபரை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று வெளிப்படையாக சொல்லியுள்ளது. அப்போது, இந்த ஒரு முறை மட்டும் என தஞ்சை சிட்டிங் எம்.பி. பேச்சை ஆரம்பிக்க, கட்சியின் தலைமையோ ஸ்ட்ரிக்டாக புதுமுகம் தான் இந்த முறை என சொல்லியதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில், திமுக தலைமை புதுமுகமான முரசொலியை வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளதாக தஞ்சாவூர் திமுகவைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

தஞ்சை தொகுதிக்குள் பெரிதாக அறிமுகம் இல்லாத முரசொலி, வேட்பாளராக இடம் பிடிப்பதற்கு அவருடைய அமைதியான சுபாவம் தான் முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது. மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ. துரை. சந்திரசேகரனின் நெருங்கிய ஆதரவாளர் முரசொலி. திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடையது பாரம்பரியமான தி.மு.க குடும்பம். முன்பே வடக்கு ஒன்றியச் செயலாளருக்கான உள்கட்சித் தேர்தலில் பழநிமாணிக்கம் தரப்பை எதிர்த்து முரசொலியை ஒன்றியச் செயலாளர் ஆக்கினார் சந்திரசேகரன். அதன் பிறகு கட்சிப்பணிகளை செய்து வந்த முரசொலி, ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, இரண்டு இடங்களில் 50 அடி உயர கொடிக் கம்பத்தில் தி.மு.க கொடி ஏற்றும் நிகழ்வை விமரிசையாக நடத்தினார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் முரசொலியை வெகுவாகப் பாராட்டினார். அமைச்சர் அன்பில் மகேஸ், மேயர் சண். ராமநாதன் ஆகியோரின் சிபாரிசும் அவருக்கு கிடைக்க வேட்பாளர் ரேஸில் வெற்றி பெற முக்கிய காரணமாக திமுகவினர் கூறுகின்றனர். அதிலும் மேயர் ராமநாதன், முரசொலிக்காக தனிப்பட்ட முறையில் உதயநிதியிடம் பேசியதாகச் சொல்லப்படுகிறது. டி.ஆர். பாலு ஆதரவும் இருந்தது இவருக்கான ப்ளஸ் பாயிண்ட். தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த முரசொலி எளிமையாவர், அமைதியான சுபாவம் கொண்டவர் எல்லோரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர் என்கின்றனர் திமுகவைச் சேர்ந்தவர்கள். அந்த பண்பே முரசொலி சத்தமில்லாமல் சாத்தித்துள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். துரை. சந்திரசேகரன் ஆதரவாளரான முரசொலிக்கு சீட் கிடைத்திருப்பதன் மூலம் சந்திரசேகரனின் கை தஞ்சையில் ஓங்கியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

புதுமுகமாக இருந்தாலும் தஞ்சை தொகுதியில் தி.மு.க-விற்கு பெரும்பான்மையான ஆதரவு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சாதாரண பொறுப்பில் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை நிரூபிக்கும் விதமாக புதியவரான முரசொலிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை பழநிமாணிக்கத்திற்கு வயது அதிகம் ஆகிவிட்டது என்றும், 6 முறை ஒரே தொகுதியில் எம்.பியாக வென்ற ஒருவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கினால், அந்த மாவட்டத்தில் பணியாற்றும் புதியவர்கள் சோர்ந்து போய்விடுவார்கள் என்பதும் தான் அக்கட்சியினர் கூறும் காரணமாக இருக்கிறது. ஆனால், சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தியில் உள்ளடி வேலை செய்யக்கூடும், தொகுதிக்கு புதிய முகம் உள்ளிட்டவை முரசொலிக்கு சவாலாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனிடையே, முரசொலியின் ஆதரவாளர்கள் தஞ்சையில் தடபுடலாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர்.

Next Story

புதிய தாலுகாவை அறிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin announced the new taluk at thanjavur district

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு செய்து புதிய வட்டமாக திருவோணம் பகுதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சீரிய வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், ‘தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும்’ என்னும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

ஒரத்தநாடு வட்டத்திலுள்ள திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், அத்தியாவசியச் சேவைகளான சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளையும் வருவாய்த் துறையின் பிற சேவைகளையும் பெறுவதற்காக ஏறத்தாழ 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தநாடு வட்டத்தின் தலைமையிடத்திற்கு மிகுந்த சிரமத்துடன் வந்து செல்ல வேண்டியுள்ளது. 

இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்குப் பொருளாதாரச் செலவுகள் அதிகமாகின்றன. அத்துடன் இந்தச் சேவைகளைப் பெறுவதற்காக அவர்கள் நாள் முழுவதும் செலவிட்டு அலையவும் வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் பொது மக்களின் துயர் துடைப்பதில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர், திருவோணம் பகுதி மக்களின் சிரமங்கள் தம்முடைய கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து அவற்றை உடனடியாகக் களைவதற்கு முடிவு செய்தார். 

அந்த முடிவைச் செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களையும் சீரமைத்து, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டத்தினை உருவாக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதற்குரிய அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினால் வெளியிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.