மோடிக்கு ஓட்டுப் போடாதீங்க.. என்று எழுதி வைத்துவிட்டு வடக்கில் ஒரு முதிய விவசாயி தற்கொலை செய்து கொண்டார். அதே நேரத்தில் மோடிக்கு ஓட்டுப் போடுங்க என்று தன்னந்தனியாக வாக்கு சேகரித்த ஒரு முதியவர் தாக்குதலுக்குள்ளாகி இறந்திருக்கிறார்.

o

Advertisment

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் புலவர் கோவிந்தராஜன். (வயது 75) சமூக ஆர்வலர். ஒரத்தநாடு கால்நடை பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உண்டு.

Advertisment

எந்தக் கட்சியும் சாராதவர் என்று சொன்னாலும் அதிமுக அனுதாபி. தற்போதைய தேர்தலில் மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று தன்னந்தனியாக கழுத்தில் எம். ஜி. ஆர், ஜெ., மோடி படங்களை மாட்டிக் கொண்டு வாக்கு சேகரிக்கத் தொடங்கினார். சனிக்கிழமை மாலை ஒரத்தநாடு அண்ணாசிலை அருகே வழக்கம் போல வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு நின்ற கண்ணந்தங்குடி மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் கோபிநாத் வாக்குவாதம் செய்த நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மோடிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க கூடாது என்று கோபிநாத் சொல்ல அதன் பிறகும் மோடிக்கு ஓட்டுப் போடுங்க என்று தனிநபர் பிரச்சாரத்தை தொடங்கிய போது முதியவரான புலவர் கோவிந்தராஜ் தாக்கப்பட்டார். அப்பகுதியில் நின்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் புலவர் கோவிந்தராஜ் இறந்திருந்தார்.

இந்த தகவல் அறிந்து வந்த அவரது மகள் அற்புதா ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவம் குறித்து விசாரனை செய்த ஒரத்தநாடு போலிசார் கோபிநாத்தை கைது செய்தனர்.

மோடிக்கு ஓட்டுக் கேட்டதால் முதியவர் அடித்துக் கொன்ற சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.