ADVERTISEMENT

''அந்தப் பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது குறித்து ஆலோசனை''-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

11:19 PM May 26, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்பின் போது பள்ளி மாணவிக்கு ஆசிரியர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பிரச்சினைக்குரிய அந்தப் பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கரோனா தடுப்பு பணிகளுக்காக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த சம்பவம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ''இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மூலம் துறை ரீதியான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. குழு அமைத்து ஓரிரு தினங்களில் விளக்கம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி, அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளது. அதேபோல் போலீசாரால் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்சினைக்குரிய அந்த பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT