Thangam Thennarasu strongly criticized the central govt over the Keezhadi

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் முதல் 2 கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த அகழாய்வானது தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றன. அதன் பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்த நிலையில், 3ஆம் கட்ட அகழாய்வை நடத்திய ஸ்ரீராமன், ஏற்கனவே கிடைத்த பொருட்களேகிடைப்பதாக கூறி அகழாய்வை நிறைவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 4ஆம் கட்ட அகழாய்வை தொடங்கிய நிலையில் தற்போது 10ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே முதல் 2 கட்ட அகழாய்வு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 982 பக்கங்கள் கொண்ட அறிக்கை தொல்லியல்துறை ஆய்வாளர் அமர்நாத் இந்தியத் தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்தார். ஆனால், இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை மத்திய தொல்லியல் துறை அதனை பொதுவெளியில் வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது.

Advertisment

Thangam Thennarasu strongly criticized the central govt over the Keezhadi

இந்த நிலையில் கீழடி முதல் 2 கட்ட அகழாய்வு ஆய்வறிக்கையில் திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்யுமாறு இந்தியத் தொல்லியல் துறை கடிதம் அனுப்பியிருந்தது. அறிக்கை சமர்ப்பித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் தற்போது அதில் திருத்தம் மேற்கொள்ள என்ன காரணம்? என்று தமிழ் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பினர். அதேசமயம், கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது, ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று இந்தியத் தொல்லியல்துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்தார். போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுக்கிறது என்று தமிழக அரசு குற்றம்சாட்டியது.

இதையடுத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரிய வேண்டியிருக்கின்றன; அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். இது மேலும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

Advertisment

Thangam Thennarasu strongly criticized the central govt over the Keezhadi

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.

5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா? மறந்து விடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.