Skip to main content

“ரிசர்வ் வங்கி சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது” - அமைச்சர் தங்கம் தென்னரசு

Published on 22/05/2025 | Edited on 22/05/2025

 

Thangam Thennarasu says RBi is bringing down thunder on the heads of the common man

தங்க நகைகளை அடமானம் வைப்பதில் வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய நடைமுறை நடைமுறைப்படுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இது குறித்து ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கையில், ‘தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்கப்படும். அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வங்கிகள் (அ) வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும். தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும்.

வெள்ளிப் பொருட்களுக்கும் கடன் வழங்க அனுமதிக்கப்படுகிறது. ஒரு கிலோவுக்கு குறைவாக உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்க அனுமதிக்கப்படும். அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் தங்கத்தின் விலையில் மட்டுமே மதிப்பிடப்படும். கடன் ஒப்பந்தத்தில் முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும். அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும். தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழகநிதியமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது. குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும்.

அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும். அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். ரிசர்வ் வங்கி உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்