அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் சிமெண்ட் ஆலைகள் உட்பட 8 ஆலைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் சமூக ஆர்வலரும் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவருமான தங்க. சண்முக சுந்தரம், கரோனா பாதிப்பால் ஊரடங்கு காரணமாக வேலையிழந்து பசியோடு இருக்கும் மக்களுக்கு அரியலூரில் இயங்கும் ஆலைகள் அனைத்தும் குடும்பத்துக்கு 5 ஆயிரம் வழங்க மத்திய மாநில அரசுகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் பணமாக இல்லையென்றாலும் நிவாரண பொருட்களை காய்கறிகளாகவோ, உணவுப் பொருட்களாகவோ வழங்க சிமெண்ட் ஆலை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இதனையடுத்து அரியலூர் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில், திருமானூர் காவல்துறை உதவி ஆய்வாளர் சிதம்பரம் தலைமையிலான போலீசார், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க. சண்முக சுந்தரத்தை கைது செய்தனர். பின்னர் சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.
'சிமெண்ட் ஆலைகளுக்கு எதிராக போராட்டம் செய்யமாட்டேன்' என உறுதிமொழி கடிதத்தை எழுதி வாங்கி கொண்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.