தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்-தமிமுன் அன்சாரி வலியுறுத்தல் 

thaminun ansari statement

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடுவழங்குவது குறித்தமசோதா மீது முடிவெடுக்க மூன்று முதல் நான்கு வாரங்கள் தேவை என ஆளுநர் தெரிவித்திருக்கும் நிலையில், இது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில்ஆளுநரின் தாமதத்திற்கு கண்டனம் தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி அறிக்கை வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில்,

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக கவர்னர் ஒப்புதளிக்காமல் கால தாமதம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த உள் இடஒதுக்கீடு கோரிக்கையை தமிழக சட்டமன்றத்தில் முதலில் எழுப்பியது நாங்கள் தான்.

அந்த வகையில் இந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதிக்காட்டுகிறோம்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு சார்பில், மக்கள் பிரதிநிதிகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது என்பது ஆளுனரின் ஜனநாயக கடமையாகும்.

எளிய மக்களின் நலன் காக்கும் ஒரு சமூக நீதி விவகாரத்தில், முடிவெடுப்பதற்கு நான்கு வாரங்கள் வரை ஆகலாம் என கவர்னர் மாளிகை தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. இது மாணவர் சேர்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல, இச்சட்டத்தையே நீர்த்து போகச் செய்யும் நோக்கமும் கொண்டதாக இருக்கிறது.

இம்மசோதா குறித்து சமீபத்தில் தமிழக அமைச்சர்கள் கவர்னரை சந்தித்தப் போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தருகிறோம் என அவர் சொன்னதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து தமிழக அமைச்சர்கள் விளக்க வேண்டும்.

கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசின் இந்த மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இல்லையேல் மக்கள் ஆதரவுடன் ஜனநாயக வழி போராட்டங்கள் வலிமை பெறுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்பதையும் எச்சரிக்கையுடன் சுட்டிக் காட்டுகிறோம் எனக்கூறியுள்ளார்.

governor THAMIMUN ANSARI
இதையும் படியுங்கள்
Subscribe