thalavadi elephant karuppan watches under cctv and surveillance by forest department

ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை கடந்த ஒரு வருடமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வந்தது. அங்கு பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, மக்காச்சோளம், ராகி, முட்டைக்கோஸ் போன்ற பயிர்களைசேதப்படுத்தியது. மேலும் காவலுக்கு இருந்த இரண்டு விவசாயிகளையும் மிதித்துக் கொன்றது.

Advertisment

இதனை அடுத்து கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என தாளவாடி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே மூன்று முறை கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கருப்பனை பிடிக்கும் முயற்சிகள்தோல்வியில் முடிந்தன. கிட்டத்தட்ட 6 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானை வனத்துறையினரிடம் இருந்து தப்பித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனைத் தொடர்ந்து அவ்வப்போது ஊருக்குள் வந்து நிலங்களை சேதப்படுத்தி வந்தது. இதனைத் தொடர்ந்து 4-வது முறையாக கருப்பன் யானையைப் பிடிக்க மாரியப்பன், சின்னத்தம்பி என 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த முறை கருப்பன் யானையை பிடித்தே ஆக வேண்டும் என்ற முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

Advertisment

அதன்படி யானை வரும் வழித்தடத்தை கண்டறிந்து அங்கு சென்றனர். தாளவாடி அடுத்த மகாராஜன்புரம் பகுதியில் உள்ள ஒரு விவசாய கரும்பு தோட்டத்திற்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு கருப்பன் யானை வந்தது. அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் கருப்பன் யானை மீது மயக்க ஊசி செலுத்தினர். காலை 5.35 மணி அளவில் கருப்பன் யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் கருப்பன் யானை மயங்கியபடி நின்று கொண்டே இருந்தது. உடனடியாக வனத்துறைலாரியில் கருப்பன் யானையை ஏற்ற முயன்றனர். ஆனால் ஏற மறுத்து அடம் பிடித்தது. கும்கி யானை மாரியப்பன் உதவியுடன் கருப்பன் யானையை லாரியில் ஏற்றும் முயற்சி நடந்தது. அப்போது கும்கி யானையுடன் ஆக்ரோஷமாக கருப்பன் யானை சண்டையிட்டது. சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு யானை லாரியில் ஏற்றப்பட்டது. பின்னர் தமிழக - கர்நாடக எல்லை பகுதியான பர்கூர் தட்டகரை வனப்பகுதியில் கருப்பன் யானை இறக்கி விடப்பட்டது. சிறிது நேரம் மயக்கத்திலே இருந்த கருப்பன் யானை அதன் பிறகு வனப்பகுதிக்குள் சென்றது.

கருப்பன் யானை நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் வனத்துறையினர் தட்டகரை வனப்பகுதியில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியை விட்டு கருப்பன் யானை வெளியேறாமல் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தட்டகரை வனப்பகுதியில் கருப்பன் யானைக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்கும் என்பதால் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் தட்டகரை பயணியர் விடுதியில் இரண்டு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.