
நாமக்கல்லில், ஆட்டோ வாங்க மானிய கடனுதவி வழங்க 3200 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தாட்கோ மேலாளர் மற்றும் தரகரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் (48). இவர் புதிதாக ஆட்டோ வாங்குவதற்காக கடன் கேட்டு, மாவட்ட ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் வளர்ச்சி நிறுவனம் எனப்படும் தாட்கோ நிறுவனத்திடம் இணையவழியில் விண்ணப்பம் செய்திருந்தார்.
விண்ணப்பத்தை பரிசீலித்த தாட்கோ மேலாளர் சக்திவேல் (42), கடந்த 12.10.2018ம் தேதி கணேசனை அழைத்து நேர்காணல் நடத்தினார். மானியத்துடன் கடனுதவி வழங்க வங்கிக்கு பரிந்துரை செய்வதாக கூறினார். இதற்காக தனக்கு 3200 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கணேசன், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆலோசனையின்பேரில், 17.10.2018ம் தேதி மாலை, தாட்கோ அலுவலகத்திற்கு கணேசன் சென்றார். அப்போது லஞ்சப் பணத்தைப் பெற்றுச்செல்வதற்கு தயாராக இருந்த பொட்டணம் பகுதியைச் சேர்ந்த தரகர் வரதராஜன், கணேசனிடம் இருந்து 3200 ரூபாயைப் பெற்றுக்கொண்டார்.
அந்தப்பணத்தைப் பெற்ற வரதராஜன், தாட்கோ மேலாளர் சக்திவேலிடம் கொடுத்தபோது, ஏற்கனவே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். தாட்கோ அலுவலகத்தில் வைத்து மேலாளர் சக்திவேலிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது.
இதுவரையில் என்னென்ன வகையில் லஞ்சம் வாங்கினார், யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது, அவருடைய சொத்து விவரங்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். லஞ்ச வழக்கில் மாவட்ட அளவிலான அதிகாரி கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது ஒருபுறம் இருக்க, சக்திவேலின் சொந்த ஊர், சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று (அக். 18ம் தேதி) அவருடைய வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் 2 மணியளவில் முடிந்தது. இதில், பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சக்திவேலின் உறவினரான ராமச்சந்திரன் என்பவர் கியூ பிரிவில் பணியாற்றி வருகிறார். சந்தேகத்தின்பேரில் அவரிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)