Skip to main content

வள்ளலார் தைப்பூச திருவிழா... ஜோதி காண குவியும் பக்தர்கள்...!

தைப்பூச திருநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் 149-வது  ஜோதி தரிசனம் இன்று காலை 6 மணி முதல் தொடங்கியது. கருப்பு, நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்புத் திரை ஆகிய 7 திரைகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.

 

Thaipusam and jothi darisanam

 ஆன்ம நேய வழிபாட்டில் புதிய அர்த்தத்தை கொடுத்தவர்  வள்ளலார்.  கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து 7 கி.மீ தொலைவிலுள்ள மருதூர் கிராமத்தில் வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகள் பிறந்தார். இராமையா பிள்ளைக்கும், சின்னம்மைக்கும் அருந்தவ புதல்வராக வள்ளலார், 5-10-1823- ல் சுபானு ஆண்டு புரட்டாசி மாதம், 21 ஞாயிறு மாலை 5.54 மணி அளவில் பிறந்தார். வள்ளற்பெருமான் பிறந்த ஆறாம் மாதமே தந்தையை இழந்தார். அதன் காரணமாக சென்னைக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது. தன் அண்ணன் இராமையா பிள்ளை அவர்களின் அரவணைப்பில் வளர தொடங்கிய வள்ளலார் கல்வியில் நாட்டமின்றி இறைவழிப்பாட்டில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். தனது ஒன்பதாவது வயதில் சொற்பொழிவுகளின் மூலம், ஆன்மீக பயணங்களை தொடங்கினார் வள்ளலார். இல்லறத்தில் நாட்டமின்றி உள்ளம் கடவுளை நாடியது, சாதி, மத கடவுள்களை வழங்குவதை விடுத்து கடவுளை ஜோதி வடிவமாக வணங்கினார்.

சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு வந்து, அங்கிருந்து வடலூர் அருகே உள்ள கருங்குழியில் தங்கி மக்களுக்கு ஆன்மீகம், சித்தமருத்துவம் உள்ளிட்ட வாழ்வியல் நெறிமுறைகளை போதித்தார். கருங்குழியில் தங்கி இருந்த போது எண்ணை என நினைத்து, தண்ணீரை ஊற்றி விளக்கெறிய செய்த அதிசயமும் நிகழ்ந்தது. அவரது போதனைகளான ஐந்து திருமுறைகளும் உருப்பெற்றது இங்குதான்.மேலும் கருங்குழிக்கு அடுத்த மேட்டுகுப்பத்தில் காலை வேளையில் பல் துலக்கி கொண்டு சென்ற போது தண்ணீர் இல்லாததால் தன் கையில் இருந்த பல் துலக்கும் குச்சியின் மூலம், ட வடிவில் கோடு கிழிக்கவே அங்கு நீர் ஊற்று வர துவங்கியது. அந்த நீர் ஊற்று தற்போதும் இங்கு காணபடுவது அதிசயமே!

 சன்மார்க்கம் என்ற கொள்கைகளான, ஜீவகாருண்யம், உயிர் கொல்லாமை, புலால் மறுத்தல் போன்ற கொள்கைகளை மக்களிடையே பரப்ப 2-2-1867 ஆம் ஆண்டு சமரச சுத்த  சன்மார்க்க சங்கத்தை வடலூரில் துவங்கி சன்மார்க்க நெறியை பரப்பினார். பசியை பிணியாக கருதிய வள்ளலார் பசியுடன் வருவோருக்கு உணவு அளித்திட 23-5-1867 பிரபவ வருடம், வைகாசி மாதம் 11 ஆம் தேதி சத்திய தர்மசாலையை நிறுவி, அன்னதானம் வழங்க அணையா அடுப்பை ஏற்றினார். இறைவனை அருட்பெருஞ்ஜோதி வடிவில் கண்ட பெருமானார், அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டிற்கென வடலூரில் 1872- ல் சத்திய ஞான சபையை நிறுவினார்.

உலகில் வேறு எங்கும் இல்லாத தனிபெரும் அமைப்பாகவும் சாதி, மதம், இனம், மொழி, தேசம் முதலிய எந்தவித வேறுபாடுகளும், இல்லாத நிலையில், அனைவரும் பிராத்தனை செய்யும் முறையில் சத்திய ஞான சபையை வள்ளற்பெருமான் அமைத்தார். சத்திய ஞானசபையில் தினசரி காலை 6-00 மணி முதல் இரவு 8 மணி வரை திருவருட்பா பாடல்களை பாடி அன்பர்கள் பிராத்தனை செய்கின்றனர்.பகல் 11-30 மணி முதல் 12 மணி வரையிலும், இரவு 7-30 மணி முதல் 8 மணி வரையிலும் பூசை நடைபெற்று வருகிறது.

 மாதம் தோறும், மாத பூசம் நடைபெறுவது வழக்கம், அதன்படி இரவு 8 மணி முதல் 8-30 மணி வரை ஆறு திரைகள் நீக்கி மூன்று முறை அருட்பெருஞ்ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. பிரதி தைப்பூச தினத்தில் ஏழு திரைகள் நீக்கி ஆறு காலம் ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெறும். தைப்பூச ஜோதி தரிசனம் காலை 6-00 மற்றும் 10 மணிக்கும், மதியம் 1-00 மணி மற்றும் இரவு 7-00, 10-00மணிக்கும், மறுநாள் காலை 5-30 மணிக்கும் ஆறு காலங்கள் ஜோதி தரிசனம் நடைபெறும்.

சத்திய ஞான சபையில் வழிபாடு செய்பவர்கள் புலை, கொலை,  தவிர்த்தவராக இருத்தல் வேண்டும் என்பது வள்ளற்பெருமான் வகுத்த விதியாகும். சித்திவளாக திருமாளிகையான மேட்டுகுப்பம், வடலூருக்கு தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது மேட்டுக்குப்பம் என்னும் கிராமம்.  அந்த கிராமத்தில் சித்திவளாகம் என்னும் இடத்தை நிறுவி வாழ்ந்த வள்ளற்பெருமான் தான் வாழ்ந்த அறையிலேயே 1874-ஆம் ஆண்டு இறைவனுடன் ஜோதியாக கலந்தார். பசித்திரு, தனித்திரு, விழித்திரு, எனவும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்கிற உன்னதமான மாஹா மந்திரத்தை அருளி சென்றார் வள்ளற்பெருமான். இன்று தைப்பூச ஜோதி தரிசனத்தை காண நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடலூர் சத்திய ஞான சபைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்