Skip to main content

தாபா ஊழியர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு... போலீசார் விசாரணை!

Published on 25/09/2022 | Edited on 25/09/2022

 

Thaba staff attack...Police investigation!

 

தாபாவிற்கு உணவு அருந்த சென்ற பட்டதாரி இளைஞருக்கும், உணவகத்தின் உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பட்டதாரி இளைஞர் காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி அருகே நிகழ்ந்துள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த நரேஷ் என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் ஆரம்பாக்கத்தில் உள்ள தாபா ஒன்றில் உணவு அருந்த நரேஷ் சென்றுள்ளார். அப்பொழுது மொபைல் போனில் சார்ஜ் இல்லாததால் கடை ஊழியர்களிடம் தனது மொபைல் போனை கொடுத்து சார்ஜ் போட சொல்லியுள்ளார். உணவருந்தி விட்டு மீண்டும் வந்து பார்த்த பொழுது அவருடைய மொபைல் போனை தாபா ஊழியர் ஒருவர் பயன்படுத்திக் கொண்டிருந்தார். இதனை பார்த்த நரேஷ் அந்த ஊழியரிடம் எனது மொபைலை ஏன் பயன்படுத்தினீர்கள் எனக் கேட்டுள்ளார்.

 

இது தொடர்பாக கடையின் உரிமையாளர்களுக்கும் நரேசிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் தாக்கப்பட்ட நரேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். அடுத்த நாள் உடலில் வலி ஏற்பட, அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே நரேஷ் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த நரேசின் குடும்பத்தினர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் அந்த தாபாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சியில் 4 இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Rs 9 lakh confiscated at 4 places in Trichy

தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் 81 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நிலையான கண்காணிப்பு குழுவும் 14 சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் பறக்கும் படை அதிகாரி வினோத் குமார் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. கீரிப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த தொகையை எடுத்து சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மணச்சநல்லூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேபோன்று மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணமானது பறக்கும் படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு திருச்சி மேற்கு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் கத்தரிக்காய் சாலையில் பிரபு தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை திருமயம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் லால்குடியில் இருந்து குமுலூர் நோக்கி தனது காரில் 50 ஆயிரத்து 500 பணத்தினை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற போது பிடித்தனர். அதனைத் தொடர்ந்து லால்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் தாசில்தார் முருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் ஆகியோரிடம் பறக்கும் படைத்தலைவர் பிரபு ஒப்படைத்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் வெங்கங்குடி பேருந்து நிறுத்தம் அருகே, காரில் சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் மொத்த விற்பனை செய்யும், மண்ணச்சநல்லூர் ராஜாஜி நகரை சேர்ந்த மூக்கன் (வயது 48) என்பவரிடமிருந்து 4,50,000 ரூபாய் ஆவணங்கள் இல்லாத ரொக்கப் பணத்தை பறக்கும் படை அதிகாரி சித்ராதேவி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.

Next Story

‘எனக்கு பிடித்த சேனல்தான் வைக்க வேண்டும்’ - சிறை வார்டன்களுக்கு ரவுடி கொலை மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 rowdy smashed CCTV cameras in Cuddalore Central Jail

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை  கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். பிரபல ரவுடி  எண்ணூர் தனசேகரன் இந்த சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக உதவி ஜெயிலரை, அவரது வீட்டில் சிறைக் காவலர் உதவியுடன், ரவுடி  எண்ணூர் தனசேகரன் பெட்ரோல் குண்டு வீசி  எரிக்க முயற்சி செய்தார். 

இவர் மீது இது குறித்து கடலூர் முத்துநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி எண்ணூர் தனசேகரன் பலமுறை சிறை அதிகாரிகளை கண்டித்து போராட்டங்கள் மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரவு கைதிகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது  ரவுடி எண்ணூர் தனசேகரன் தனக்கு பிடித்த சேனலை வைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் திடீரென்று சிறை வளாகத்தில் இருந்த சிசிடிவி. கேமராக்களை உடைத்துள்ளார். இது குறித்து கடலூர் முத்துநகர் காவல் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள்  புகார் அளித்தனர். அதில் எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி. கேமராக்களை உடைத்ததாகவும், சிறை வார்டன்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இதனை கண்டித்து பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.