
வேலூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பாலியல் கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் சென்னை வில்லிவாக்கம் ஆட்டோ ஓட்டுநர் அன்புச்செல்வனுக்கு சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது. இதனை எதிர்த்த அன்புச்செல்வன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கை நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் விசாரித்தார். அப்போது, பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணின் சாட்சியை, கண்ணுற்ற சாட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், செவிவழி சாட்சியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அன்புச்செல்வன் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன், “பார்வை மாற்றுத்திறனாளி என்றாலும், பாதிக்கப்பட்ட பெண் உலகில் நடப்பவைகளை ஒலியினால் பார்க்கிறார். அருகில் இருப்பவர்களை அவர்களது குரலின் சத்தத்தினால் அடையாளம் காண்கிறார். குரல் வழியாக அடையாளம் கண்டதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த சாட்சியத்தைப் புறம் தள்ளமுடியாது.
சராசரியான மனிதனின் சாட்சியத்தைவிட எந்த வகையிலும் மாற்றுத்திறனாளிகளின் சாட்சியம் தரம் தாழ்ந்ததாக கருத முடியாது. அப்படி கருதினால், அரசியலமைப்புச் சட்டத்தின் அனைவரும் சமம் என்ற அடிப்படை கொள்கைக்கே முரணாகிவிடும். பார்வை இழந்த அந்தப் பெண்ணின் கண்ணுக்குள் வேண்டுமானால் இருள் இருக்கலாம். ஆனால், அவரது சாட்சியத்தில் வெளிச்சம் உள்ளதாக கருதுகிறேன். அவரது சாட்சியத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
அடுத்ததாக, ஒரு கண் பார்வை இல்லாத இளம்பெண் மீது அன்பும் இரக்கமும் காட்டாமல், அவருக்குப் பாலியல் கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் அன்புச்செல்வனுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய 7 ஆண்டு சிறை தண்டனையில் ஒருநாள் கூட குறைப்பதற்கு விரும்பவில்லை. அந்த தண்டனையை உறுதிசெய்கிறேன்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சத்தை வழங்க தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழுவுக்கு உத்தரவிடுகிறேன். இந்த வழக்கை திறமையாகவும் விரைவாகவும் புலன்விசாரணை செய்த வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இந்த ஐகோர்ட்டு பாராட்டு தெரிவிக்கிறது” என நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் தீர்ப்பளித்து வழக்கை முடித்துவைத்தார்.