/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sirkazhi_0.jpg)
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புறவழிச்சாலையில் பழுதடைந்து நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின் பகுதியில் அரசு விரைவு பேருந்து மோதிய கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததோடு 25 பேர் படுகாயத்துடன் சீர்காழி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெருத்த சோகத்தை உண்டாக்கியுள்ளது.
திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு விரைவு பேருந்து பயணிகளைஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேசமயம், சீர்காழி அருகே பாதரகுடி என்கிற இடத்தில் உள்ள புறவழிச்சாலை ஓரத்தில் நாகை மாவட்டம், நரிமணத்திலிருந்து பெட்ரோலிய குருடாயில் ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி பழுதாகி சாலையோரம் நின்றிருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3983.jpg)
இந்நிலையில், அதி வேகத்தில் வந்த அரசு பேருந்து டேங்கர் லாரியின் பின் புறத்தில் மோதியது. இதில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதேசமயம், சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சிதம்பரம் பள்ளிப்படை பகுதியைசேர்ந்த குருக்கள் பத்மநாபன் அவரது மகன் அருள்ராஜ் மற்றும் பாலமுருகன் ஆகிய மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பேருந்து சக்கரத்தின் அடியில் இருசக்கர வாகனம் சிக்கியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.
மேலும் பேருந்து முன் பகுதி டேங்கர் லாரியில் மோதி முற்றிலும் சேதமடைந்தது. இதில் முன் பகுதியில் அமர்ந்திருந்த நடத்துநர் சீட்டுடன் தூக்கி சாலையில் வீசப்பட்டு விழுந்தார்.திருவண்ணாமலையைச் சேர்ந்த நடத்துநர் விஜயசாரதி சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இறந்தவர்களின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த 25 பேரும் சீர்காழி அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில், பலத்த காயம் அடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை தமுமுக ஆம்புலன்ஸ், 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மூலமாக விரைந்து மீட்டு சிகிச்சையில் சேர்த்தனர். விபத்து தொடர்பாக சீர்காழி டி.எஸ்.பி லாமேக்வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் பிரதாப் மற்றும் லாரி ஓட்டுநர் ஜான்பியர்ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1478.jpg)
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிக்காக சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை முழுவதும் பழுதடைந்தும் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டும் இரு பக்கம் வரக்கூடிய பேருந்துகள் ஒரே சாலையில் சென்று வருகிறது. சாலைகள் போடும் பணியால் மின்விளக்கு இல்லாமல் இருளில் சாலை எது எனத்தெரியாத அளவில் இருட்டுப் பகுதியாக உள்ளதால் டேங்கர் லாரி பழுதடைந்து நின்றது தெரியாமல் அரசு பேருந்து ஓட்டுநர் அதன்மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதியதே விபத்திற்கு காரணம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.
லாரியின் பின் பகுதி உடைந்து குருடாயில் வெளியே சாலையில் ஊற்றிக் கொண்டிருப்பதால் தீப்பற்றிக் கொள்ளாமல் இருக்க தீயணைப்புத்துறையினர்நுரை தண்ணீரைபீய்ச்சியடித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
Follow Us