tenkasi district incident police investigation

Advertisment

தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை மேக்கரை பகுதியிலுள்ள அடவி நயினார் அணைக்குச் செல்லும் சாலையின் அருகே வசித்து வரும் முகம்மது கனியின் மகன் காசிர் அலி (வயது 25). இவருக்கும் தென்காசி பகுதியின் ரஹ்மத்துல்லாவின் மகள் அசன்பீவிக்கும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் பொருட்டு, அசன் பீவி தன் தந்தை வீட்டுக்குப் போயிருக்கிறார். இரவு காசிர் அலி மற்றும் அவரது பாட்டி ஜெய்துன் பீவியும் (வயது 70) இருவர் மட்டுமே வீட்டில் தூங்கியுள்ளனர்.

இதனிடையே, தன் மகள் அசன்பீவியை மருமகனின் வீட்டில் கொண்டு சென்று விடும் பொருட்டு காசிர் அலியின் மாமனார் ஜூலை 11- ஆம் தேதி அன்று காலை காசிர் அலியின் வீட்டிற்கு வந்திருக்கிறார். அது சமயம் காசிர் அலி ரத்த வெள்ளத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியானார்கள். தொடர்ந்து வீட்டின் அருகேயுள்ள தொழுவத்தில் பாட்டி ஜெய்துன் பீவியும் கொலை செய்யப்பட்டு, அரைகுறை ஆடையுடன் கிடந்திருக்கிறார். அருகே ஒரு சேவலும் இறந்து கிடந்திருக்கிறது. அதிர்ச்சியான இருவரும் அச்சன்புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். தகவலறிந்த தென்காசி பொறுப்பு எஸ்.பி.யான சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் மற்றும் தடயவியல் துறையினரின் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

tenkasi district incident police investigation

Advertisment

அச்சன்புதூர் காவல் அதிகாரியான இன்ஸ்பெக்டர் வேல்கனியின் தலைமையிலான போலீசார், விசாரணை தகவல் அடிப்படையில் மேக்கரைப் பகுதியின் முகம்மது காசிம் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முகம்மது காசிம்மிற்கும், காசிர் அலிக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் அன்றைய தினம் தகராறு ஏற்பட்டிருக்கிறது. பக்ரீத் அன்று காசிர் அலி வீட்டிற்குச் செல்ல, போதை ஏற்றிக் கொண்ட முகம்மது காசிம், காசிர் அலியின் வீடு சென்று அவரை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

போதையில் பெரிய கட்டையைக் கொண்டு காசிர் அலியின் தலையில் அடித்ததில், அவர் மண்டைப் பிளந்து ரத்த வெள்ளத்தில் சரிந்திருக்கிறார். சத்தம் கேட்டு வந்த பாட்டி ஜெய்துன் பீவியைத் தொழுவத்திற்கு இழுத்துச் சென்றவன் அவளது மார்பு வயிறு பகுதியில் மிதித்தவன் போதையில் பாட்டியைப் பாலியல் துன்புறுத்தியுள்ளான். பின்னர், கட்டையால் பாட்டியை அடித்துக் கொன்றிருக்கிறான். போலீசின் விசாரணையில், அன்றைய தினம் காலையில் நடந்த தகராறு பற்றித் தெரியவர உடனே போலீசார் முகம்மது காசிமை வளைத்துக் கொண்டு வந்திருக்கின்றனர் என்று அச்சன்புதூர் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

இரட்டைக் கொலையில் வயதான மூதாட்டியை வன்கொடுமைக்குட்படுத்தியது மேக்கரைப் பகுதியை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.