Skip to main content

கடைகளைத் திறக்க வேண்டும்... புளியங்குடியில் வியாபாரிகள் போர்க்கொடி!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

tenkasi district  coronavirus lockdown Merchants sub collector meet


தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி அடித்தட்டு மக்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளைக் கொண்ட நெருக்கமான நகரம். மார்ச் மாத இறுதியில் கரோனா தொற்றுள்ளவர்கள் மூன்று பேர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்குப் பாதிப்பில்லாமல் நகரமிருந்தது.
 


வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களின் தொடர்பால் திடீரெனத் தொற்றுப் பரவியவர்களின் எண்ணிக்கை நகரத்தின் ஒரு பகுதியில் மட்டும் 38 என்ற எண்ணிக்கையளவில் உயர்ந்துவிட்டது. இதனால் நகரமே பதற்றமடைய தொற்று கண்ட 1, 9, 14, 19, 21 உள்ளிட்ட ஐந்து வார்டுகளின் தெருக்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த வார்டுகள் மூடி சீல் வைக்கப்பட்டன. அந்த மக்கள் எவரும் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நகரமே தனிமையாகத் துண்டிக்கப்பட்டு வெளித்தொடர்பே அற்றுப் போனநிலை. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.

கடந்த 40 நாட்களாக புளியங்குடி நகராட்சியின் ஆணையாளர் குமார்சிங் தலைமையிலான சுகாதாரப் பணியாளர்கள் நெருக்கடியான நேரத்திலும் சுகாதாரப் பணிகளைத் தீவிரமாகச் செய்ததால் தனிமைப் பகுதி மற்றும் பிற பகுதிகளின் தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக கரோனா தொற்று இல்லாததால் நகரம் ஆறுதலடைந்தது.
 

 


இந்நிலையில் மார்ச் 25- ஆம் தேதி முதல் தொடர்ந்து நகரம் லாக்டவுணிலிருந்ததால் மாவட்டத்தின் பிற பகுதிகளைப் போன்று பொது முடக்கத்தில் தளர்வு செய்யப்பட்டது. இருப்பினும் புளியங்குடி மட்டும் தடையிலிருந்தது. இதனிடையே சூழ்நிலையயைச் சுட்டிக்காட்டிய புளியங்குடி நகர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கடைகளைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து கடந்த 17- ஆம் தேதி அவர்களுடன் சப் கலெக்டர் பழனிகுமார், தாசில்தார் அழகப்பராஜா டி.எஸ்.பி. சக்திவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதில் பாதிப்பிலிருந்த வார்டுகளைத் தவிர, மற்றப் பகுதி கடைகள் மறுநாள் முதல் திறக்கலாம் என்று பேசி முடிக்கப்பட்டது. அதன்படி படிப்படியாகத் திறக்கப்பட்டது. ஆனால் 14, 19, வார்டுகளில் பாதிக்கப்பட்டவைகளை மட்டும் தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக காந்தி பஜாரில் உள்ள அனைத்துக் கடைகளையும் மூடிவைத்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

http://onelink.to/nknapp


குறிப்பாக ரம்ஜான் பண்டிகைக்கான ஆடை, உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து காந்தி பஜார் வியாபாரிகள் முருகையா, சுந்தர் அலாவுதீன், உள்ளிட்ட வியாபாரிகள் அனைத்து கடைகளையும் திறக்க வேண்டும். தடைகூடாது என்று நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்திய ஆணையர் குமார்சிங் கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்பே போராட்டத்தைத் தற்காலிகமாக வியாபாரிகள் கைவிட்டுச் சென்றனர்.

நீண்ட நாள் தடை, வியாபாரிகளை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் (படங்கள்)

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வருமானவரித்துறை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருமான வரித்துறை கூடுதல் பொது இயக்குநர் ஸ்வப்னாநானுசம்பத், வருமானவரி கூடுதல் இயக்குநர்கள் மோகன்ராஜ், பார்வதி ஆகியோர் கலந்து கொண்டு வியாபாரிகளின் வருமானவரி மற்றும் ஊழல் தொடர்பான தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். மேலும், இதில் வியாபாரிகள் சங்க சென்னை மண்டல தலைவர் ஜோதி, தலைமைச்செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார், திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தலைவர் வி.பி.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.