Skip to main content

வளர்ப்பு தந்தையால் தாயான சிறுமி! - மிரட்டும் நரபலி பின்னணி?

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

Tenkasi Baby night puja case
                                                      மாதிரி படம் 

 

ஒரு பெண்ணின் வாழ்க்கையும், அவளது மகளின் வாழ்க்கையும் இப்படி ஒரு பூகம்பத்தில் சிக்கியிருக்கக்கூடாதுதான்!

 

சிவகாசி, சிவானந்தம் நகரில் வசிக்கும் 37 வயது பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து, கங்காதரன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ்ந்துவந்தார். இவருக்கு 15 வயதிலும் 10 வயதிலும் இரண்டு மகள்கள் உள்ளனர். 

 

பெற்றால்தான் பிள்ளையா? என்ற நல்ல மனது இல்லாதவனாக கங்காதரன் இருந்திருக்கிறான். இன்னொருவருக்குப் பிறந்தவள்தானே என்ற கெட்ட எண்ணத்தில், மகளென்றும் பாராமல் மிரட்டியே, தன் இச்சையைத் தீர்த்திருக்கிறான். இதன் காரணமாக, 15 வயது சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறாள். கடந்த ஜூலை 30ஆம் தேதி அவளுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

 

முறைகேடான உறவால், அதுவும் சிறுமிக்குப் பிறந்த குழந்தை என்பதால், தடுப்பூசி போடவோ, பிறப்பு சான்றிதழ் பெற பதிவு செய்யவோ முடியாத நிலை ஏற்பட, குழந்தையின் எதிர்காலம் கருதி சிறுமியின் தாய், கங்காதரன் மீது சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, கங்காதரன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைதான கங்காதரனின் குடும்பப் பின்னணி திகிலடையச் செய்வதாக இருக்கிறது. கங்காதரனின் அப்பா வாசுதேவன், சிவானந்தம் நகரில் உள்ள பாம்பாட்டி சித்தர் கோவிலில் சாமியாராக இருந்துவருகிறார். அதனால், கங்காதரனும் சாமியார் வேடத்தில் வாழ்ந்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி, சிறுமிக்குத் தன் மூலம் பிறந்த ஆண் குழந்தையை எடுத்துச்சென்று, தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகிலுள்ள கடனாநதி பகுதியில் இரவு பூஜை செய்திருக்கிறார். நரபலி ஸ்டைலில் பூஜை நடந்ததைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், போலீஸுக்குத் தகவல் தர, வாசுதேவன், கங்காதரன் உள்ளிட்ட அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்துவிட்டு, ‘வெறும் பூஜைதானே!’ என்று விடுவித்துள்ளனர்.

 

ஆனாலும் அந்தக் கிராம மக்கள், ‘நல்லவேளை நாங்கள் பார்த்தோம்; குழந்தை உயிர் பிழைத்தது!’ என்று பேசிவருகின்றனர். போலி சாமியார்கள் இந்த மாதிரியான கொடூர காரியங்களிலெல்லாம் ஈடுபடுவது கொடுமையானது!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர் அட்டை இங்கே! என் ஓட்டு எங்கே? - வாக்காளர் ஆத்திரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Sivakasi, voter panic due to inability to vote
சாந்தி - சங்கரன்

தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களில், ஒரு கோடியே 74லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்தத்தில், அதி முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாத வாக்காளர்கள் 28 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் யார் யாருக்கு என்னென்ன  கஷ்டமான சூழ்நிலையோ தெரியவில்லை. ஆனாலும், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், சோம்பேறித்தனமாக வீட்டிலோ, அலட்சியமாக வெளியூர்களிலோ இருந்தவர்கள், அனேகம் பேர்.

சிவகாசியில் வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்காததால், கொதித்துபோய்ப் பேசினார்.  “இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுட்டு இருக்கேன். வாக்காளர் அடையாள அட்டை எங்ககிட்ட இருந்தும், இந்தத்தேர்தல்ல உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னா, இது அக்கிரமம் இல்லியா? இதெல்லாம் எப்படி நடக்குது? ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லி, அங்கேயிருந்த சிவகாசி மாநகராட்சி அலுவலர்களைப் பார்க்கச் சொன்னாங்க.

 Sivakasi, voter panic due to inability to vote

மூணு மாசத்துக்கு முன்னால லிஸ்ட்லசெக் பண்ணும்போது எங்க பேரு இருந்துச்சுன்னு நான் சொன்னேன். லிஸ்ட்ல உங்க பேரு இல்ல. போன் நம்பர் தப்பா இருக்குன்னாங்க. அப்புறம் இன்டர்நெட்ல EPIC நம்பரை போட்டுப் பார்த்து, எலக்‌ஷன் கமிஷன்ல என் பேரு இருக்கிறத காமிச்சதும், அப்படியான்னு சொல்லி, ஓட்டு போடவிட்டாங்க. ஆனா..என் வீட்டுக்காரம்மா சாந்திக்கு ஓட்டு இல்லைன்னு சாதிச்சிட்டாங்க. அவங்க ரொம்பவும் மனசு வேதனைப்பட்டு, நூறு சதவீதம் வாக்களிப்போம்னு போர்டு வைக்கிறாங்க. ஆனா.. ஓட்டு போட வந்தவங்களுக்கு ஓட்டு இல்லைங்கிறாங்க. அப்படின்னா.. நான் வச்சிருக்கிற வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன மதிப்புன்னு மொதல்ல சத்தம் போட்டாங்க. அப்புறம் அழுதுட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.

 Sivakasi, voter panic due to inability to vote

இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்கச் சென்ற நடிகர் சூரியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க வராத கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போன சாந்தி, நடிகர்சூரி போன்றோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். வாக்களிப்பதில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் உள்ளது டிஜிட்டல் இந்தியா என்று கடுமையாக சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள். 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.