Tenkasi Assembly Constituency Counting Stopped

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழனி என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில் பழனி, செல்வமோகன்தாஸை விட 370 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுத் தேர்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்வமோகன்தாஸ், வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடந்ததுள்ளது. எனவே பதிவான வாக்குகளை மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ண உத்தரவிட்டு இருந்தது.

Advertisment

இதையடுத்து காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்ற நிலையில் 20 நிமிடம் தாமதமாகக் காலை 10.20 மணிக்கு தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிட்டு இருந்தார். இந்த மறு வாக்கு எண்ணிக்கையில் 2589 தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மதியம் 12.30 மணியளவில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் எனஎதிர்பார்க்கப்பட்டது. மேலும் தேர்தல் அலுவலராக தென்காசி உதவி ஆட்சியர் லாவண்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில் வாக்குப் பதிவின்போது அளிக்கப்பட்ட படிவம் 13 மற்றும் 13 பி ஆகியவற்றைப் பரிசீலித்து சரிபார்த்த பிறகே படிவம் 13 எனப்படும் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தபால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மறுவாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.