Advertisment

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இது தமிழகத்தின் 33வது மாவட்டமாகும்.

புதிய மாவட்டத்தின் துவக்கவிழா தென்காசியில் இன்று கோலாகலமாக நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கான விழாவில் கலந்துகொண்டு புதிய மாவட்டத்தை துவக்கி வைத்தார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் இந்த விழாவில் வழங்கப்பட்டது.

புதிதாக உருவாகும் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோயில் புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது. இப்புதிய மாவட்டம் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் கோட்டங்களுடன் தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கேபுதூர், திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் உள்ளிட்ட 8 தாலுக்காக்களை கொண்டு இயங்கும்.

Advertisment

சட்டமன்ற தொகுதிகளை பொறுத்தவரை தென்காசி, கடையநல்லூர் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆலங்குளம் ஆகிய ஐந்து தொகுதிகள் மாவட்டத்தில் இடம் பெறுகிறது.

புதிய மாவட்டம் இம்மாத இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் தற்காலிகமாக வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு பின்னர் போதிய இட வசதிகளுடன் கூடிய கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதிய மாவட்டம் அமைக்கப்படும் அதே வேளையில் கல்வி, வேலைவாய்ப்பு, சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.