Skip to main content

கனிம வளங்கள் எடுப்பதற்கான டெண்டர் அறிவிப்பு... வழக்கு தொடர்ந்த திமுக முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன்!  

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

Tender notice for extraction of mineral resources ... Former DMK MP filed petition

 

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனிம வளங்களை எடுப்பதற்கான, புதிய டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, திமுக முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 18 இடங்களில் கருப்பு, சிவப்பு, சாம்பல் நிற கிரானைட்டுகளை எடுக்க,  கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட டெண்டர் அறிவிப்புகளை எதிர்த்து, திமுக முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன் மற்றும் காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் ஆகியோர் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

 

கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சுற்றுச்சூழல் சான்றிதழ் பெறப்பட வேண்டுமென்றும், வழிகாட்டுதல்களுக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ள இந்த டெண்டர் அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டெண்டர் நடவடிக்கை தொடரலாம் என்றும், ஆனால் அந்த இடங்களை ஒப்படைக்கக் கூடாது என்றும் இடைக்காலத் தடை விதித்திருந்தது. 

 

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் 17 குவாரிகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 குவாரிகளும் அமைக்க  ஜனவரி 21ஆம் தேதி புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், சுரங்கங்களுக்கான விதிகளையும், சுற்றுச்சூழல் விதிகளையும் பின்பற்றாமல், மீண்டும் புதிய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக,  திமுக தர்மபுரி முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன்,  புதிதாக இரண்டு வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.

 

நூறு கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையிலும், ஆளுங்கட்சியினருக்கு ஒதுக்கிடும் வகையிலும் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டுமென,  தாமரைச்செல்வன் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

 

இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.

 

சார்ந்த செய்திகள்