high court chennai

இரண்டு கோடி ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய டெண்டரை அறிவிக்கும்போது, 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டுமென்ற விதியைப் பின்பற்ற வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

பழைய கட்டிடங்களை இடிப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தை சேர்ந்த தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தின் டெண்டர் அறிவிப்பு,ஜூன் 26-ஆம் தேதி வெளியிட்டது. டெண்டருக்கு விண்ணப்பிக்க ஜூலை 7-ஆம் தேதி மாலை 4 மணி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தின் 20-வது பிரிவின்படி, டெண்டர் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளுக்கு 15 நாட்களுக்கு முன் அறிவிப்பாணை வெளியிடப்பட வேண்டுமென்ற விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனஸ்ரீ லக்‌ஷ்மி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், அதன் உரிமையாளர் வி.முனிகிருஷ்ணன் என்பவர், தெள்ளார் ஊராட்சி ஒன்றிய ஆணையரை அணுகி, இறுதி தேதியைத் தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

பின்னர்,வேண்டப்பட்டவருக்கு டெண்டர் ஒதுக்கப்படுவதற்காக,தாமதமாக டெண்டர் அறிவிக்கப்பட்டதாகக்கூறி, விதிகளைப் பின்பற்றாமல் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்யக்கோரி,அந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisment

அந்த வழக்கு,நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இ.சத்யராஜ் ஆஜராகி, டெண்டர் விதிகளைப் பின்பற்றாமல், ஒவ்வொரு முறையும் இதேபோலத்தான் டெண்டர் அறிவிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். கரோனா காலக் கட்டுப்பாடுகளைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அவர்களுக்கு வேண்டப்பட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி வருவதாகவும், இது எதிர்காலத்தில் தொடராத வகையில்,நீதிமன்றம் தலையிட்டு தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

தமிழக அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் இ.பாலமுருகன் ஆஜராகி, மூன்று வெவ்வேறு பணிகளுக்காக மட்டுமே டெண்டர் அறிவிக்கப்பட்டது.ஜூலை 7-ஆம் தேதி டெண்டர் விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால், ஜூலை 9-ஆம் தேதி, அந்த பணிகள் மற்றொரு நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மேலும், டெண்டர் நடைமுறைகள் முடிந்து, அதில் வெற்றி பெற்ற நிறுவனங்கள் பணிகளைத் தொடங்கிவிட்டதாக தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், அரசின் விளக்கத்தின்படி பணிகள் தொடங்கிவிட்டதால், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக்கூறி, ஸ்ரீ லக்‌ஷ்மி கன்ஸ்ட்ரக்சன்ஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

அதேசமயம்,எதிர்வரும் காலங்களில் இரண்டு கோடி ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய பணிகளுக்காக டெண்டர் அறிவிக்கும்போது,தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தின் 20-வது பிரிவின் கீழ்,15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டுமென்ற விதியைப் பின்பற்றுவதை மனதில் கொள்ள வேண்டுமெனஅரசு தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.