தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக டெண்டரில் நடந்த ரூ.1480 கோடி முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு, அறப்போர் இயக்கம் கொடுத்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதாக உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

சக்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் கொள்முதலுக்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் டெண்டர் அறிவிப்பாணை வெளியிட்டிருந்தது. இதில், 'கிறிஸ்டி ப்ரைட்கிராம்' என்ற தனியார் நிறுவனத்துக்கு டெண்டரை ஒதுக்க, டெண்டர் விதிமுறைகளில் திருத்தம் செய்து மோசடி செய்தது தொடர்பாக, விசாரணை நடத்தக்கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சிபிஐ-யிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
மேலும், ரூ.1480 கோடி அளவிற்கு நடைபெற்ற இந்த முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வரிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வரும் 15-ஆம் தேதி, வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு காவல் ஆணையரிடம் அறப்போர் இயக்கம் மனு அளித்திருந்தது.
இந்த மனு மீது முடிவெடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அறப்போர் இயக்கம் கொடுத்த மனு ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு விட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து புதிய மனு தாக்கல் செய்ய அறப்போர் இயக்கத்திற்கு அறிவுறுத்திய நீதிபதி, விசாரணையை மார்ச் 11- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.