Skip to main content

எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த பத்தாண்டு தொலை நோக்கு திட்ட ஆலோசனைக் கூட்டம்! 

Published on 03/08/2022 | Edited on 03/08/2022

 

The ten-year vision plan consultation meeting held under the MLA

மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் ‘பத்தாண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம்’ என்ற தலைப்பில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் அப்துல் சமது எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. மணப்பாறை ஒன்றியக் குழு தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி, வையம்பட்டி ஒன்றிய குழு தலைவர் குணசீலன், மருங்காபுரி ஒன்றிய குழு தலைவர் பழனியாண்டி மற்றும் மருங்காபுரி, மணப்பாறை வட்டாட்சியர்கள், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், மணப்பாறை நகராட்சி ஆணையர், வளநாடு புத்தாநத்தம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலை வகித்தனர். 

 

நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக் கல்வித்துறை, வருவாய்த்துறை, வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் பராமரிப்புத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, உணவு துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொகுதியின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்துப் பேசினார்கள்.

 

இக்கூட்டத்தில்  சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது பேசும்போது, இந்நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்த தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து இக்கலந்தாலோசனை கூட்டத்தை ஆறுமாதத்திற்கு ஒருமுறை நடத்த அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அனைத்து பணிகளையும் விரைவு படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கூகுள் மேப்பால் வழிமாறிய வடநாட்டு சாமியார்கள்; அதிர்ச்சியில் உறைந்த மணமேட்டுப்பட்டி

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Northern preachers who were diverted by Google Maps; The public surrounded

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

சென்னை திருவண்ணாமலையின் செய்யாறு திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி, நாகை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் கடத்த வந்ததாக வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்த வடமாநில சாமியார்கள் கூகுள் மேப் மூலம் சேலத்துக்கு செல்ல முயன்ற நிலையில் அவர்கள் வழி தவறி கிராமம் ஒன்றில் புகுந்துள்ளனர். இதனால் குழந்தைகள் கடத்த வந்த நபர்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து சேலத்திற்கு கூகுள் மேப் உதவியுடன் வடமாநில சாமியார்கள் பயணித்தபோது தவறுதலாக விராலிமலை-மணப்பாறை சாலையில் உள்ள மணமேட்டுப்பட்டி கிராமத்திற்குள் புகுந்துள்ளனர். கிராமத்துக்குள் வந்த அவர்கள் வழி தெரியாமல் அந்த வழியில் இருந்த சிறுவர்களிடம் வழி கேட்டுள்ளனர். இதனைப் பார்த்த அந்த கிராமப் மக்கள் கும்பலாக வந்துள்ள சாமியார்களை கண்டு அதிர்ந்து குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என நினைத்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். வடமாநில சாமியார்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமேஸ்வரம் சென்று விட்டு திரும்பி வந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் பத்திரமாக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

மணப்பாறை பேருந்து விபத்து; தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

Published on 25/06/2023 | Edited on 25/06/2023

 

nn

 

அண்மையில் கடலூரில் தனியார் பேருந்து ஒன்று மற்றொரு தனியார் பேருந்து மீது மோதி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் மணப்பாறை அருகே இன்று மாலை அதேபோல் கொடூர விபத்து நிகழ்ந்தது.

 

திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்து திருச்சி மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிரே வந்த கார் பேருந்து மீது மோதியதில் நிலை தடுமாறிய பேருந்து சாலையிலிருந்து தலைகீழாக கவிழ்ந்து விட்டது. இந்த கொடூர விபத்தில் முதல் கட்டமாக ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Manaparai bus accident; Tamil Nadu Chief Minister Relief Notification

 

இந்நிலையில் இந்த கொடூர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்த முத்தமிழ்செல்வன், நாகரத்தினம், ஐயப்பன், மணிகண்டன், தீனதயாளன் ஆகிய ஐந்து பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.