திருவண்ணாமலையில் சிறுமி ஒருவர் சிறிய பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானத்தை அருந்திய நிலையில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு அதிரடி உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் கணிகிலுப்பை கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார்- ஜோதி தம்பதியின் 6 வயது குழந்தை காவியாஸ்ரீ. வீட்டின் அருகே பெட்டிக் கடையில் காவியாஸ்ரீ சிறிய ரக பாட்டிலில் வைத்து அடைத்து விற்கப்படும் பழரச குளிர் பானத்தை வாங்கி குடித்துள்ளார். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்திலேயே சிறுமி காவியாஸ்ரீக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதோடு, மூக்கிலும் வாயிலும் நுரை தள்ளியது. உடனடியாக சிறுமி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சையில் இருந்த சிறுமி காவியாஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் உயிரிழப்புக்கு காலாவதியான குளிர்பான பழரசம் தான் காரணம் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அந்த பழரசம் தயாரிக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஏ.கே.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் பழரச பானம் தயாரிக்கும் ஆலையில் ஆய்வு செய்த மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள், அங்கு தயாரிக்கப்படும் ஆப்பிள், மாம்பழம் உள்ளிட்ட பழரச குளிர்பானங்களின் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். செய்யாறு பகுதிகளிலும் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள குளிர்பானங்களின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் தனியார் குளிர்பான ஆலைகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களை சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காலாவதியான குளிர்பானங்கள் விற்கப்பட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும், அதேபோல் சம்பந்தப்பட்ட ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர்கள் இந்த ஆய்வில் ஈடுபட வேண்டும் என்றும், சோதனை செய்து தவறு இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால் வேனா உத்தரவிட்டிருக்கிறார். அனைத்து கடைகளிலும் சோதனை நடத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பிராண்டட், அண்ட் பிராண்டட், அரசால் அங்கீகரிக்கப்பட்டு உணவு பாதுகாப்புத் துறையால் சான்றிதழ் பெறப்பட்ட குளிர்பானங்கள் மீதும் தனியாக மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்த வேண்டும். உள்ளூரில் தயாரித்து விற்கப்படும் குளிர்பானங்களின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.