சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்தித்தர கோரிய வழக்கில் சமூக நலத்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 Temporary shelter for roadside residents chennai high court government

Advertisment

டிசம்பர்- ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், சாலை ஓரங்களில் வசிக்கும் வீடுகள் இல்லாத மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாவதாகக் கூறி, அவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்திக் கொடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன் இன்று (11/02/2020) விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக நலத்துறை செயலாளர் மதுமதி சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘சுவதார் க்ரே’திட்டத்தின் மூலம் ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள் ஆகியோர் தங்குவதற்கு சமூக நலத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும், குடும்பத்தைப் பிரிந்து வேறு இடங்களுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு ஏதுவாக அவர்களுக்கென தனி விடுதி நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறார் சீர்திருத்த சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள ஆயிரத்து 112 குழந்தைகள் காப்பகங்களை சமூக நலத்துறை கண்காணித்து வருவதாகவும், 36 காப்பகங்களை அரசு நேரடியாக நடத்திவருவதாகவும், என்.ஜி.ஓ.க்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு மாதம்தோறும் 2 ஆயிரத்து 160 ரூபாய் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 11- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்றைய தினம், சமூக நலத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.