தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த அறிவிப்பாணைக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக, பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் 2019 டிசம்பர் 19-ம் தேதி விளம்பர அறிவிப்பாணையை வெளியிட்டார். ஏற்கனவே, 518 ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் நிலையில், புதிதாக மீண்டும் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான இந்த அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி கடலூரைச் சேர்ந்த அருட்பெருஞ்ஜோதி என்ற தற்காலிக ஆசிரியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Chennai_High_Court 2222222222_6.jpg)
அவர் தனது மனுவில், தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பணி வரன்முறை செய்யப்படவில்லை என்றும், ஆசிரியர் பணிக்கு எத்தனை பேர் தேவை என்பதைக் கண்டறியாமல், தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பது பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது என்பதால், இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான நிரந்தர ஆசிரியர்களே பணியாற்றுவதாகவும், மணி கணக்குக்கு ஆசிரியர்களை நியமிப்பது சட்டவிரோதமானது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பார்த்திபன், தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
Follow Us