/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SALEM9999 (1).jpg)
காடையாம்பட்டி அருகே, டெம்போ ஓட்டுநரை கொலை செய்த வழக்கில், குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படைகளை அமைத்து சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள ஊமகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற செந்தில்குமார் (வயது 43). டெம்போ வாகன ஓட்டுநர். இவருடைய மனைவி சங்கீதா (வயது 30). இவர்களுக்கு 14 வயதில் மகன் இருக்கிறான். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
செம்மாண்டபட்டியில் உள்ள தன்னுடைய வீட்டில் செந்தில்குமார் தனியாக வசித்து வந்தார். ஜூன் 8- ஆம் தேதி காலை, அவர் நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அக்கம்பக்கத்தினர் அவருடைய வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கே அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்து கிடந்தது தெரிய வந்தது.
ஓமலூர் காவல்நிலைய காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள், செந்தில்குமாரை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.இரவில் எப்போதும் வீட்டின் உள்பக்கமாக கதவை தாழிடாமல் சும்மாவே கதவை மூடி வைத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று அவரை கல்லால் தாக்கி கொலை செய்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.
இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க ஓமலூர் காவல் ஆய்வாளர் இந்திராணி, தீவட்டிப்பட்டி ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டுள்ளார். தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)