அஸ்திவாரம் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட கோயில் கலசம்...!

Temple urn found while digging the foundation

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியேரிப்பட்டி நத்தக்காடு கிராமத்தைச் சேர்ந்ததங்கராஜ் (60),வீட்டைப் புதுப்பித்துக் கட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய மனை நிலத்தில் அஸ்திவாரத்திற்காக குழிதோண்டியபோது, சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள பழங்கால கோயில் கலசம் தென்பட்டுள்ளது. பூமிக்கடியில் கிடைக்கும் அரிய பொருட்கள் எதுவாயினும் அது அரசுக்குச் சொந்தமானது என்பதால், இதுகுறித்து அவர் உடனடியாக தொளசம்பட்டி காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.

காவல்துறையினர், ஓமலூர் துணை வட்டாட்சியர் கருணாகரன், வருவாய் அலுவலர் சங்கீதா, கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் கலசத்தை மீட்டு, கருவூலத்தில் ஒப்படைத்தனர். நீண்ட காலமாக மண்ணுக்குள் புதைந்து கிடந்ததால் கலசத்தின் அடிப்பகுதி அரித்துக் கிடந்தது. உள்ளீடற்ற மெல்லிய தகட்டினால் கலசம் செய்யப்பட்டிருந்தது. அது ஐம்பொன்னால் ஆனதா அல்லது சாதாரண இரும்பு உலோகமாக என்று உடனடியாகத் தெரியவில்லை.

இது தொடர்பாக தொல்லியல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஓமலூர், தாரமங்கலம் சுற்றுவட்டாரங்களில் உள்ள கோயில்களில் கலசங்கள் எப்போதாவது காணாமல் போனதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

omalur
இதையும் படியுங்கள்
Subscribe