Temple property in farmer land

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வலசக்காடு ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சிகுடியைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணியன். இவர், நேற்று முன்தினம் (01.06.2021) மாலை 3 மணியளவில் தனது வயலுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது பெலாந்துறை வாய்க்கால் ஓரத்தில் ஒரு அடி உயரமுள்ள இரண்டு கோபுர கலசங்கள் கேட்பாரற்று கிடந்துள்ளன. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன், உடனடியாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் மூலம் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளார்.

Advertisment

இதையடுத்து சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுந்தரம், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வினதா, சோழதரம் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் கலசம் கிடந்த இடத்திற்கு விரைந்து சென்று அவற்றைக் கைப்பற்றினார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், கைப்பற்றப்பட்ட அந்த கலசங்களை ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் முகம்மது உசேனிடம் இன்ஸ்பெக்டர் வினதா ஒப்படைத்துள்ளார்.

Advertisment

இரண்டு கலசங்களையும் வெவ்வேறு கோயில்களில் இருந்து திருடிய மர்ம நபர்கள் இங்குகொண்டு வந்து போட்டுள்ளனரா? அந்தக் கோபுர கலசங்கள் அந்த இடத்திற்கு எப்படி வந்தது? என்பவைகுறித்தெல்லாம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோபுர கலசத்தில் இரிடியம் என்றொரு வேதிப்பொருள் இருப்பதாகவும் அந்த இரிடியம் கோடிக்கணக்கில் மதிப்புடையது என்றும் அப்படிப்பட்ட இரிடியம் உள்ள கோபுர கலசத்தைத் திருடி கொண்டுபோய்க் கொடுத்தால் கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் பல்வேறு கோயில்களில் அவ்வப்போது கோபுர கலசங்கள் திருடுபோவது நடந்துவந்தது.

காலப்போக்கில் கோபுரக் கலசத்தில் அதுபோன்ற இரிடியம் என்ற வேதிப்பொருள் எதுவுமில்லை. அது கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் எல்லாம் விலை போகாது என்பதை போலீசார் கண்டுபிடித்ததோடு, பல இடங்களில் கோபுரக் கலசத்தைத் திருடியவர்களைக் கைது செய்து சிறையிலும் அடைத்தனர். அதன் பிறகு கோபுர கலசங்கள் களவு போவது நின்றுபோனது. அந்தக் காலகட்டத்தில் ஏதாவது ஒரு கோவிலில் இந்தக் கோபுரக் கலசங்களைத் திருடி வந்தவர்கள், இதை யாரும் விலைக்கு வாங்க முன்வராததால் அந்தக் கலசங்களை வாய்க்கால் பகுதியில் போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என்றும் அப்பகுதியில் உள்ள சில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisment