Skip to main content

சுமதிநாத் பகவான் கோவிலுக்கு அதிகாரிகளை நியமிக்கக்கோரி வழக்கு! - இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

temple chennai high court


ஜெயின் மதத் தீர்த்தங்கரரான சுமதிநாத் பகவானின் கோவிலைக் கட்டுவதற்கும், வருமானத்தைக் கண்காணிக்கவும், அதிகாரிகளை நியமிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இதுதொடர்பாக, ஜெயின் மதத்தின் 5- வது தீர்த்தங்கரரான சுமதிநாத் பகவானின் சார்பில், அவரது பக்தரான சந்தீப் எஸ்.ஜெயின் என்பவர், பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், "சென்னை பெரம்பூரில், கொன்னூர் சாலையில் உள்ள புறம்போக்கு நிலத்தில், சுமதிநாத் பகவானின் சிலை வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்த நிலையில், 151 கிரவுண்ட் நிலம் 'ஸ்ரீ தாதாகிரி கார்டன்' என்ற பெயருக்கு வழங்கப்பட்டது. 1956- ஆம் ஆண்டு, அதன் மேலாளர் மங்கள் சந்த் ஜபக் ஜெயின் பெயரில் அனுபவப் பட்டாவாக வழங்கப்பட்டுள்ளது. பின்னர், 2011- ஆம் ஆண்டு பட்டா பெயர்மாற்றம் செய்யப்பட்டபோது, தாதாபடி ஸ்ரீ குசால் சூரிஜி ஜி சந்திர சூரிஜி அறக்கட்டளை பெயரில் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது. 100 கிரவுண்ட் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சுமதிநாத் பகவானின் ஆலயத்தைப் புதுப்பிக்க வந்த ஸ்ரீ சந்திரபிரபு மஹராஜ் ஜுனா, ஜெயின் அறக்கட்டளையுடன் இணைந்து, கூட்டுச்சதி செய்து, நிலத்தை அபகரித்துள்ளார். 500 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தில் திருமண அரங்குகள், 15 கடைகள், அஞ்சலகம் ஆகியவை இயங்கி வருகின்றன. அவற்றிற்கான வாடகையை, இரண்டு அறக்கட்டளைகளுமே பெற்று வருகின்றன. கோவிலுக்கும், அதன் சொத்துகள் மூலமாக வரும் வருமானத்தைக் கண்காணிக்கவும், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். சுமதிநாத் பகவானின் ஆலயம் கட்டும் பணியை மேற்கொள்ள, செயல் அலுவலரை நியமிக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

 

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறையும், இரு அறக்கட்டளைகளும் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்