Advertisment

இரண்டு வாலிபர்களால் லட்சங்களை இழந்த தொலைத் தொடர்புத் துறை! 

th

Advertisment

சேலத்தில் இரண்டு இடங்களில் மர்ம நபர்கள் போலி தொலைபேசி நிறுவனம் நடத்தி வந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவர்கள், சர்வதேச அழைப்புகளை எல்லாம் உள்ளூர் அழைப்புகளாக மாற்றி பயன்படுத்தி வந்துள்ளனர்.

சேலத்தில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி, மோசடி நடந்து வருவதாக சென்னை உளவுப்பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உளவுப்பிரிவு மற்றும் தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் சேலம் வந்தனர். சேலம் கொண்டலாம்பட்டி செல்வ நகர் நடுத்தெருவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் ஒரு வாலிபர், கடந்த நான்கு மாதமாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்துள்ளார்.

இதையடுத்து திங்கள்கிழமை (பிப். 13, 2023) உளவுப்பிரிவினர் மற்றும் கொண்டலாம்பட்டி காவல்துறையினர் அந்த வீட்டிற்குச் சென்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பத்துக்கும் மேற்பட்ட ரிசீவர்கள், வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றும் உபகரணங்கள் இருப்பது தெரிய வந்தது. அந்த அறையில் லைட் கேமரா ஒன்று இயக்கத்தில் இருந்தது. அந்த கேமராவை காவல்துறையினர் எதேச்சையாக தொட்டபோதுஅந்த அறையில் இயக்கத்தில் இருந்த அனைத்து மின்னணு சாதனங்களும் செயல் இழந்தன. அங்கிருந்து 300க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை கைப்பற்றியுள்ளனர். அந்த வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும் என்றும், மாதம் 6 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அங்கிருந்த ரிசீவர் உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisment

இதேபோல சேலம் மெய்யனூர் மஜித் தெருவில் மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான வீடு ஒன்றையும், வாலிபர் ஒருவர் வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார். அவரும் வெளிநாட்டு அலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் அவரால், பல லட்சம் ரூபாய் தொலைத்தொடர்பு துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளரிடம் அந்த வாலிபர் கொடுத்து இருந்த ஆதார், அலைபேசி எண் ஆகியவற்றைக் கொண்டு விசாரித்ததில் அவை அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரித்தோம். ''வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றித் தருவதன் மூலம் மர்ம நபர்கள் பெருமளவில் பணம் சம்பாதித்து இருக்கலாம். அல்லது, சட்ட விரோத கும்பலுக்கு உதவுவதற்காகவும் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது'' எனக் கூறிய காவல்துறையினர், இதுகுறித்து உள்ளூர் காவல்துறை மட்டுமின்றி கியூ பிரிவு காவல்துறையினரும் விசாரித்து வருவதாகக் கூறினர்.

கைப்பற்றப்பட்ட சிம் கார்டுகளைக் கொண்டு அவை யார் யார் பெயரில் வாங்கப்பட்டது? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். மேலும் சந்தேகத்திற்குரிய இரண்டு வீடுகளிலும் தங்கியிருந்த நபர்கள் யார்? அவர்களுக்குள் தொடர்பு இருக்கிறதா? என அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Salem telecom
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe