தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று (13/12/2021) தனி விமானம் மூலம் திருச்சி வந்தனர். விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் சந்திரசேகர் ராவை திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Advertisment

அதைத் தொடர்ந்து, உலக புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்ற தெலங்கானா முதலமைச்சருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், குடும்பத்தினருடன் அவர் சாமி தரிசனம் செய்தார். அதேபோல், கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதமும் வழங்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், இன்று (14/12/2021) விமானம் மூலம் சென்னைக்கு வந்த முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக, தனது வீட்டு வாசலில் சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து தெலங்கானா முதலமைச்சரை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சருக்கு முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பூங்கொத்து கொடுத்தார். பின்னர், தனது அலுவலகத்துக்கு அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து சென்றார்.

Advertisment

இந்த சந்திப்பின் போது, காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டம், 2024- ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறுகின்றன.

இச்சந்திப்பின் போது, அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதலமைச்சரின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.