
சேலத்தில், மது குடிக்க பணம் கேட்டதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் கிச்சிப்பாளையம் மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (26). கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு இவர், தனது நண்பர்களுடன் ஓந்தாபிள்ளைக்காடு பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்தார். இந்த கும்பலுக்கு அருகே தினேஷ்குமார் என்கிற பூனையன், அஜித், அசோக் உள்ளிட்ட நான்கு பேர் தனிக்குழுவாக அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தினேஷ்குமாரின் குழுவைச் சேர்ந்த ஒரு வாலிபர், ஜெயக்குமாருடன் இருந்த கோபிநாத்திடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஜெயக்குமார், அவர்களின் தகராறை விலக்கி விட்டுள்ளார். அப்போது தினேஷ்குமார், அங்கிருந்த உருட்டுக் கட்டையை எடுத்து ஜெயக்குமாரின் தலையில் தாக்கினார். இதில் நிலைகுலைந்து கீழே சரிந்த ஜெயக்குமாரை, அவருடைய கூட்டாளிகள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கிச்சிப்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினேஷ்குமார், வெங்கடேஷ், அஜித், அசோக் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Follow Us