Advertisment

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற உத்தரவு!!

Teenager hanged and committed suicide; Order to transfer case to CBCID

திருமணத்துக்கு வற்புறுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புழல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த புழல் சக்திவேல் நகரை சேர்ந்த தேஜ்பால் சிங் என்பவரின் மகள் காயத்ரி, 'கானுபாபு ஃபுட்ஸ்' என்ற உணவுப் பொருள் விற்பனை நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 20ம் தேதி அவரது அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்பத்தினர் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக, புழல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதால், விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் எனக் கோரி தேஜ்பால் சிங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், காவல் துறையினர் தன்னிடம் விசாரணை நடத்தாமல், காயத்ரி ஏற்கனவே பணியாற்றிய நிறுவன உரிமையாளர் விக்ராந்த் சர்மா என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறியிருந்தார். மேலும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், மகளின் உடல் தரையில் கிடத்தப்பட்டிருந்தது சந்தேகத்தை எழுப்புவதால் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தி குமார் சுகுமார குரூப், புழல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

இந்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் காயத்ரியின் குரல்வளையில் முறிவு ஏதும் ஏற்படவில்லை என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, தற்கொலைக்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும், இந்த வழக்கில் விசாரணை நியாயமாக நடப்பதாகத் தெரியவில்லை என்றும் கூறி, வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், இளம்பெண் காயத்ரி மரணம் தொடர்பான வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கும்படி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டதுடன், அனுபவமிக்க அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த சிபிசிஐடி-க்கும் உத்தரவிட்டுள்ளார்.

puzhal Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe