Teen passed away due to family problems? - Police investigation

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ளது சோழபாண்டியபுரம். அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜி(32) - கனிமொழி (27) தம்பதியர். இவர் அந்தக் கிராமத்தின் வருவாய்த்துறை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்குத் திருமணமாகி ஆறு வயதில் கவிஸ்ரீ மற்றும் ஆறு மாதக் குழந்தை தஸ்விகா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது குழந்தைகள் இருவருக்கும் அடிக்கடி உடல் நலம்பாதிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தனது கணவரிடம் மனைவி கனிமொழி கோபமாகக் கேட்டுள்ளார்.

குழந்தைகளின் உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போகிறது. எனவே பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்று குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். நான் பலமுறை வலியுறுத்தி கூறியும் அது குறித்து அலட்சியமாக இருப்பது ஏன் என்று கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் மனமுடைந்த கனிமொழி நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் வீட்டில் இருந்து திடீரென்று காணாமல் போயுள்ளார். கனிமொழியை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். கனிமொழியைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவரது கணவர் ராஜி திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கனிமொழியைத் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அதே ஊரில் உள்ள குளத்தில் கனிமொழி பிணமாக மிதப்பதாக அப்பகுதிக்கு ஆடு மாடு மேய்க்கச் சென்ற ஊர்மக்கள்போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கனிமொழி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இரண்டு குழந்தைகளுக்குத் தாயான கனிமொழி குளத்தில் பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கனிமொழியின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.