Teen girl struggle in front of the husband house

சேலத்தில், கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற கணவர், குழந்தையின் பராமரிப்புச் செலவுக்கு பணம் தராததால், அவருடைய வீட்டு முன்பு அமர்ந்து இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Advertisment

சேலம் மல்லமூப்பம்பட்டியைச் சேர்ந்தவர் காவியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய கணவர் சிவபிரகாசம். இவர்களுக்கு பத்து மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாட்டால் தம்பதியினர் பிரிந்து தனித்தனியாக வசிக்கின்றனர். கணவர் சிவபிரகாசமும் அதே பகுதியில்தான் வசிக்கிறார். சனிக்கிழமை (ஜன. 15) காலையில் காவியா, கணவர் வீட்டு முன்பு கைக்குழந்தையுடன் அமர்ந்து திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் அங்கு வந்து காவியாவிடம் விசாரித்தனர். காவியாவும், சிவபிரகாசமும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இருவீட்டார் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவர், கட்டட வேலைக்குச் சென்று வருகிறார். அவர் மீது போக்சோ வழக்குகள் விசாரணையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து தனியாக வசிக்கின்றனர்.

மனைவிக்கும், அவருடைய பராமரிப்பில் இருக்கும் தன் குழந்தைக்கும் சேர்த்து சிவபிரகாசம் மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் செலவுகளுக்காக கொடுத்து வந்துள்ளார். ஜனவரி மாதம் பிறந்து 15 நாள்கள் ஆகியும் இந்த மாதத்திற்குரிய தொகையைக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இதனால் குழந்தைக்கு பால் மற்றும் வீட்டுச்செலவுகளுக்கு பணம் இல்லாமல் காவியா அவதிப்பட்டு வந்துள்ளார். பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டும் பிடிகொடுக்காமல் இருந்ததால் அதிருப்தி அடைந்த காவியா, கணவர் வீட்டு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் கணவன், மனைவி இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.