‘தொழில்நுட்ப கோளாறு’ - தேர்வை ரத்து செய்த டி.என்.பி.எஸ்.சி.!

Technical fault TNPSC canceled the exam

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப்-1, குரூப்-2, குரூப்-4, தொழில்நுட்ப பணிகள் உள்ளிட்ட தேர்வுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு கடந்த 14ஆம் தேதி (14.12.2024) நடைபெற்றது. இந்நிலையில் அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-2 பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி (13.09.2024) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இத்தேர்விற்கான கணினிவழித் தேர்வு கடந்த 14ஆம் தேதி(14.12.2024) பிற்பகல் 15 மாவட்ட மையங்களில் 4 ஆயிரத்து 186 தேர்வர்களுக்கு நடத்தப்பட்டது. சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்வர்களிடமிருந்து மறுதேர்வு நடத்திட வேண்டி தேர்வாணையத்தில் கோரிக்கை பெறப்பட்டது.

இதனையடுத்து தேர்வர்களின் கோரிக்கையினை தேர்வாணையம் முறையாக பரிசீலனை செய்து அதனை ஏற்று இந்த கடந்த 14ஆம் தேதி பிற்பகல் நடைபெற்ற கணினிவழித் தேர்வினை தேர்வாணையம் ரத்து செய்கிறது. மேலும், ஏற்கனவே இத்தேர்விற்காகத் தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு, மறுதேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி (22.02.2025) ஒளிக்குறி உணரி (OMR) முறையில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும். பின்னர் தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

lawyer tnpsc
இதையும் படியுங்கள்
Subscribe