Skip to main content

மறைந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு உதவும் குழு..!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

Team to help late journalist's family ..!

 

கரோனாவால் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனியார் தொலைக்காட்சியில் ஈரோடு மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 15ம் தேதி உயிரிழந்தார். 

 

இதனையடுத்து மறைந்த செய்தியாளர் ராஜேந்திரனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சங்கத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். சங்கத்தின் செயலாளர் ஜீவாதங்கவேல் தலைமையேற்றார். தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு செய்தியாளர் ராஜேந்திரனின் உருவப்படத்தைத் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

 

பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பின்படி,  உயிரிழந்த ராஜேந்திரன் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அமைச்சர் முத்துசாமியிடம் பத்திரிகையாளர் சங்கம் சார்பாகக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த இரங்கல் கூட்டத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்,  அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் கேவி ராமலிங்கம், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, கேபிள் டிவி சேர்மன் குறிஞ்சி என் சிவகுமார், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், தென்னரசு, முன்னாள் மேயர் குமார், முருகேஷ் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரவி, மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், தி,மு.க. மாவட்ட துனை செயலாளர் ஆ.செந்தில்குமார், பொருளாளர் பழனிச்சாமி, மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி உரையாற்றினார்.

 

மறைந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு உதவும் பொருட்டு செங்குந்தர் கல்விக் கழகத் தலைவர் சிவானந்தம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மூலம் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் மூலம் உதவிகள் பெற்று அக்குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய முடிவு செய்யப்பட்டது.
 

 

சார்ந்த செய்திகள்