அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்கள் மாணவர்களுடன் ஒன்றிப் போய்விடுகின்றனர். பொதுவாக பாடப் புத்தங்களைத் தாண்டி மாணவர்களின் மற்ற நிறை, குறைகளையும் கேட்டு அதற்கான தீர்வுகளையும் கொடுப்பதால் மாணவர்களின் மனக்குறைகள் மறைந்து நன்றாக படிக்கத் தொடங்குகிறார்கள். இப்படியான ஆசிரியர்களை மாணவர்கள் ஆசிரியர்களாக மட்டுமின்றி அதற்கு மேல் வைத்துப் பார்க்கிறார்கள்.
இதுபோன்ற ஆசிரியர்கள் அந்தப் பள்ளிகளில் இருந்து வேறு பள்ளிகளுக்கு இடமாறுதலில் செல்லும் போது மாணவர்களால் அந்த பிரிவை ஏற்க முடியாமல் தவிக்கின்றனர். பல சம்பவங்களில் காண முடிந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 15 ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணியாற்றி பெற்றோர்கள், கொடையாளர்களின் உதவியுடன் தமிழ்நாட்டில் ஆகச்சிறந்த ஹைடெக் அரசுப் பள்ளியாக மாற்றி டெல்லியையே திரும்பிப் பார்க்க வைத்து தமிழ்நாடு அரசின் புதுமைப் பள்ளிக்கான முதல் விருதையும் பெற்ற தலைமை ஆசிரியர் ஜோதிமணி இடமாறுதலில் பச்சலூர் புறப்பட்ட போது அவரிடம் பயின்ற மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பெற்றோர்கள் சக ஆசிரியர்கள் என அனைவருமே கதறிக் கதறி அழுது காலில் விழுந்து போகாதீங்க சார் என்று கோரிிக்கை வைத்தனர்.
இதுபோல கல்வி கற்கும் மாணவர்கள் ஒருபக்கமும் இடமாறுதலில் செல்லும் கற்பிக்கும் ஆசிரியர்கள் மறுபுறமும் நின்று கண் கலங்கி நிற்கும் போது ஆசிரியர் - மாணவர் உறவைக் கடந்த ஒரு உண்ணதமான உறவு அங்கே மேம்பட்டு நிற்கிறது. இதைக் காணும் பலரும் கலங்கி நிற்கிறார்கள்.
இந்நிலையில் தான் இன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிக்கும் நேரத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு செல்வதைக் கேட்டு மாணவர்கள் கண் கலங்கி கண்ணீர் வடித்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆண்டுகளாக பணியாற்றி மாணவர்களை 100% தேர்ச்சிபெற வைத்த சமூக அறிவியல் ஆசிரியர் கா.பால்பாண்டி, அறிவியல் ஆசிரியர் ரெ.பூங்குழலி, மற்றும் 2 ஆண்டுகள் பணியாற்றிய ஆங்கில ஆசிரியர் பொன்வடிவு ஆகியோர் மாணவர்களிடம் ஆசிரியர்களாக மட்டுமின்றி நலன் விரும்பிகளாக இருந்ததால் மாணவ, மாணவிகளுக்கு இவர்களை ரொம்பவே பிடித்திருந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/15/a4425-2025-07-15-14-46-28.jpg)
தற்போது நடந்து வரும் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று 3 ஆசிரியர்களும் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாறுதலில் செல்ல உத்தரவு பெற்றுள்ளனர். இன்று செவ்வாய் கிழமைக்காலை பணியிட மாறுதல் உத்தரவுடன் மேற்பனைக்காடு பள்ளிக்கு வந்த போது நம்ம ஆசிரியர்கள் எல்லாம் வேற ஊருக்கு போறாங்களாம் என்ற தகவல் மாணவ, மாணவிகளுக்கு தெரிந்ததும் ஆசிரியர்களை சூழ்ந்து கொண்ட மாணவ, மாணவிகள் நீங்க போகாதீங்க சார், போகாதீங்க மிஸ் என்று மாணவ, மாணவிகள் கலங்கி நின்றபோது ஆசிரியர்களும் கலங்கிவிட்டனர். இதைப் பார்த்த மற்றவர்களையும் கலங்க தை்துவிட்டது. வேறு பள்ளிக்கு போனாலும் நாங்க உங்களைப் பார்க்க வருவோம் என்று தற்காலிக ஆறுதல் வார்த்தைகளை கூறி மாணவ, மாணவிகளை சமாதானம் கூறி கலங்கிய கண்களுடன் விடைபெற்று வெளியேறினர் ஆசிரியர்கள்.
தான் இந்தப் பள்ளியைவிட்டு போகும் போது மாணவர்களுக்கு பந்துகளை பரிசாக வழங்கி கண்கள் கலங்க விடைபெற்றார் ஆசிரியர் பால்பாண்டி. பல பள்ளிகளில் சில ஆசிரியர்கள் எப்போது இந்தப் பள்ளியைவிட்டு போவார்கள் என்ற எண்ணம் பல மாணவர்களுக்கு இருக்கிறது. ஆனால் பல ஆசிரியர்கள் அடுத்த பள்ளிக்கு செல்வதை மாணவர்களின் மனங்கள் ஏற்கவில்லை என்பது இந்த ஆசிரியர்கள் மாணவர்களின் மனங்களில் நிறைந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது.