/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/996_163.jpg)
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தியுள்ளது.புத்தாண்டு பரிசாக உள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர்முதலமைச்சருக்கு நன்றிக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத் தலைவர் அம்பேத் மற்றும் பொதுச் செயலாளர் இனியன் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள நன்றிக் கடிதத்தில் கூறியிருப்பதாவது, “எதிர்கால தமிழகத்தின் அறிவுக் களஞ்சியமான மாணவச் செல்வங்களை உருவாக்குகின்ற தலையாயப் பணியைச் செய்கின்ற ஆசிரியர்களுக்கும், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற அரசு அலுவலர்களுக்கும் 2023 ஜனவரி 1 முதல் அகவிலைப் படியை 34 சதவிகத்திலிருந்து 4 சதவிகிதம் உயர்த்தி 38 சதவிகிதமாக வழங்கி சுமார் 16 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும்படி செய்திருக்கின்றீர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பினை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் பேருவகையுடன் வரவேற்று மகிழ்கிறது.
மேலும், தமிழ்நாட்டின் உயர்கல்வியின் தரத்தை உலக அரங்கில் உயர்த்தி மாணவர்களின் உயர்கல்வி கனவை தன்னிறைவு பெறச் செய்து அவர்களுடைய வளமான வாழ்க்கைக்கு மிகச்சிறந்த வளங்களை வழங்கும் தமிழ்நாடு அரசுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக நிற்போம். ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை, நீட் தேர்வு விலக்கு மசோதா, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் பொருட்டு ஆங்கிலப் பாடத்திட்டத்தில் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டம், இளநிலை பயிலும் மாணவர்கள் உயர்கல்வி பயில வழிகாட்டிடஅவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம் நடத்தும் நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் தாங்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தாங்கள் தமிழக உயர்கல்வியின் மேம்பாட்டிற்கு ஆற்றி வரும் சேவைக்கும் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் முழுமையான ஆதரவை வழங்கி உறுதுணையாக இருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)