Skip to main content

பகுதிநேர ஆசிரியர்கள் உருக்கமான வேண்டுகோள்!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020
 teachers



பேரிடர் கால உதவியாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளத்தை கொடுக்க முதல்வர் ஆணையிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து செந்தில்குமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, "26-8-2011 சட்டசபையில் 110 விதியின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இதற்காக ஆண்டிற்கு அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் வழங்க ரூ. 99 கோடியே 29 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் நியமனம் செய்த பின்னர் மே மாதம் சம்பளம் தருவதில்லை. நியமன அரசாணையில் 11 மாதத்திற்கு மட்டுமே  சம்பளம் என்று குறிப்படாதபோது,  கல்வித்துறையில் ஒருமாதம் சம்பளம் பிடித்தம் செய்து வருவது மிகவும் வருந்ததக்கது. இப்படியே மே மாதம் சம்பளம் கொடுக்காமல் 8 ஆண்டுகள் முடிந்து விட்டது.

ஒரு மாதம் சம்பளம் கொடுக்காமல் அடுத்த மாதம் எப்படி குடும்பத்தை நடத்துவது. அதிலும் இந்தமுறை கரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்  குடும்பங்கள் நிலை மிகவும்  கவலையுடன் உள்ளது.  இந்த கஷ்டமான நேரத்தில் மே மாதம் சம்பளம் ரூ 7700 கொடுத்தால் பேருதவியாக  இருக்கும் என கோரிக்கை வைத்து  வருகின்றனர். 

2012 ஆம் ஆண்டு  நியமனம் செய்த 16,549 பேரில்,  தற்போதுள்ள 12ஆயிரம் பகுதிநேர  ஆசிரியர்கள் குடும்பங்களை காப்பாற்ற, இந்தமுறை ஒருமாதம் சம்பளமான ரூ 7700-ஐ மே மாதம் சம்பளத்தை கொடுத்து பேருதவி செய்திட முதல்வர் அவர்கள் ஆணையிட வேண்டும். இதற்காக சுமார் 10 கோடி நிதி ஒதுக்கி ஒரு நிவாரணமாக இம்முறை வழங்க எதிர்பார்க்கின்றோம். இக்கட்டான நேரங்களில் அரசுக்கு துணை நின்றதை கவனத்தில் கொண்டு இந்த சம்பளத்தை வழங்க வேண்டும்.
 

முதல்வர், துணைமுதல்வர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் ஒருங்கிணைந்து நல்ல முடிவெடுத்து நிதி ஒப்புதல் பெற்று மே மாதம் சம்பளம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கிடைக்க ஆணையிட வேண்டுகிறோம்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.