
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'எங்கு படிக்கலாம்; என்ன படிக்கலாம்; வாங்க பேசலாம்' பிளஸ்-2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த், ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், திரைப்பட நடிகர் சமுத்திரக்கனி, தமிழ்நாடு காவல்துறை முன்னாள் உயர் அதிகாரிகளான ராஜேந்திரன், கலியமூர்த்தி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 3000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வழிகாட்டி நிகழ்ச்சியில் தலைசிறந்த பேச்சாளர்களும், சிறந்த வல்லுநர்களும் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டவும் திருவிழாவில் ஜாலியாக அறிவிப்பதற்காக இசை நிகழ்ச்சிகள் நடத்துவது போல இந்த நிகழ்ச்சியிலும் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். அந்த இசை நிகழ்ச்சியில் சினிமாவில் வரும் இரட்டை அர்த்த வசனம் கொண்ட குத்து பாடல்கள் போட்டதால் மாணவர்கள் கெத்துக் காட்டி, குறிப்பேடுகளை கிழித்தெறிந்து, இருக்கைகளை தூக்கிப்போட்டு ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப் பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சியோடு கவனித்தனர். அவர்களால் அங்கு இது பற்றி எதுவும் தங்கள் மாணவர்களிடம் கேட்க முடியவில்லை.
காலை 10:30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மதியம் 1:30 மணி வரை நடந்தது. 3 மணி நேரம் இடைவிடாமல் தொடர்ந்து மாணவ, மாணவிகளை ஒரே இடத்தில் உட்கார வைத்ததால் கடுப்பான மாணவர்கள் கொதித்தெழுந்து, தங்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பேடுகளை கிழித்தெறிந்தும், நாற்காலிகளை தூக்கிப் போட்டும் களேபரத்தில் ஈடுபட்டனர். இதனைப் பார்த்த பொதுமக்களில் சிலர், வருங்கால இளைய தலைமுறை எப்படி இருக்கிறது பாருங்கள் என தலையில் அடித்துக் கொண்டு சென்றனர்.