Published on 02/05/2020 | Edited on 02/05/2020

நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பின்பற்றப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை நீடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று புதிய உச்சமாக இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் ஒரே நாளில் 203 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனா தடுப்பு பணியில் 50 வயதிற்கு உட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்றலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கரோனா தடுப்பு பணியில் மருத்துவம் அல்லாத தன்னார்வ பணிகளுக்கு விருப்பம் தெரிவிக்கும் 50 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் ஆர்வமிருந்தால் பங்கேற்கலாம். எடுத்துக்காட்டாக ரேஷன் பொருள்கள் முறையாக வருகிறதா என்பதை கண்காணிப்பது, ஒருங்கிணைப்பது மற்றும் பொது இடங்களில் தனிமனித இடைவெளியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற மருத்துவம் அல்லாத சேவைகளுக்கு விருப்பமுள்ள, 50 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆர்வமுள்ள ஆசிரியர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை அணுகினால் அவர்கள் கரோனா தடுப்பு பணியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.