/https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/`1_7.jpg)
நாமக்கல் அருகே, மாணவிகளை தவறாகபடம் பிடித்த அரசுப்பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள கீரம்பூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இருபாலர் பள்ளியான இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சமூக அறிவியல் பாடத்தின் ஆசிரியராக பன்னீர்செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளை தனது அலைபேசியில் தவறாகப் படம் பிடித்தும்,காணொலி காட்சியாக பதிவு செய்தும் வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள், ஏப்ரல்12ம் தேதி பள்ளி முன்பு திரண்டனர். புகாருக்குள்ளான ஆசிரியரின்அலைபேசியை வாங்கிப் பார்த்தபோது, அதில் ஏராளமான மாணவிகளின் படங்கள் தவறாக எடுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. பல படங்கள் அழிக்கப்பட்டும் இருந்தன. 'ரெக்கவரி' மென்பொருள் மூலம் அழிக்கப்பட்ட படங்களை மீட்டெடுத்து பார்த்தபோது, அந்தப் பள்ளியில் பயிலும் பல மாணவிகளை தவறான வழிகளில் அவர் படம் பிடித்து இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள்பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கினர். இதனால் அந்த இடமே களேபரம் ஆனது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷர்மிளா, ஆசிரியர் பன்னீர்செல்வத்தை ஓர் அறையில் வைத்து பூட்டிவிட்டு, பரமத்திவேலூர் காவல்நிலையத்திற்குதகவல் அளித்தார். அங்கு வந்த காவல்துறையினரிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் பெற்றோர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் பன்னீர்செல்வம் இருந்த அறையை காவல்துறையினர் திறக்க முயன்றபோது அதற்கும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஏடிஎஸ்பி மணிமாறன், டிஎஸ்பி கலையரசன் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்கள் நிகழ்விடம் சென்றனர். அவர்கள் பெற்றோர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதீஷ்பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் நேரில் விசாரணை நடத்தினார்.
ஆசிரியர் பன்னீர்செல்வத்தை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக காவல்துறையினர் தங்கள் வாகனத்தில் ஏற்றினர். அந்த வாகனத்தை தடுத்து நிறுத்திய பெற்றோர்கள், பள்ளிக்கு உடனடியாக மாவட்ட ஆட்சியர், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் வர வேண்டும் என்று முழக்கமிட்டனர்.காவல்துறை உயர் அலுவலர்கள்புகாரில் சிக்கிய ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்துஒருவழியாக பெற்றோர்கள் போராட்டத்தைக் கைவிட்டதோடுகாவல்துறை வாகனத்தையும் செல்ல அனுமதித்தனர்.
முதல் கட்ட விசாரணையில், ஆசிரியர் பன்னீர்செல்வம் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அவருடைய மனைவி அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதும் தெரிய வந்தது. அவருடைய மகன் கல்லூரியில் படித்து வருவதும், மகள் 9ம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது. தொடர்ந்து காவல்துறையினர் ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு நாமக்கல் சிறையில் அடைத்தனர்.
தற்போது பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளை தவறாக படம் பிடித்து கைதான சம்பவம் நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)