Skip to main content

பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய தாளாளர்; மாணவர்கள் சிறைவைக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

The teacher who assaulted the school headmaster; Students are shocked by the incident of imprisonment

 

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியரை பள்ளியின் தாளாளர் பள்ளி வளாகத்திலேயே வைத்து தாக்கியதோடு, மாணவர்களையும் சேர்த்து பள்ளியைப் பூட்டிவிட்டுச் சென்ற சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தேனி திட்டச்சாலையில் மகாராஜா தொடக்கப்பள்ளி என்ற அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 30 மாணவர்கள் அந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக சென்றாயபெருமாள் பணியாற்றி வருகிறார். ஒரு ஆசிரியையும் அந்த பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். அப்பள்ளியின் தாளாளர் அன்பழகன் மகாராஜா தொடக்கப் பள்ளியில் தாளாளராக இருப்பதை மறைத்து தேனி அல்லிநகரம் பகுதியில் செயல்பட்டு வரும் முத்தையா அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

 

The teacher who assaulted the school headmaster; Students are shocked by the incident of imprisonment

 

இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அவ்வப்போது சென்றுள்ளது. ஆனாலும் அன்பழகன் பணத்தை கொடுத்து அதிகாரிகளை சரிகட்டிவிடுவதாகக் கூறப்படுகிறது. தான் ஒரு பள்ளியில் தாளாளராக இருந்துகொண்டு மற்றொரு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இருப்பது குறித்து தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாள் தான் புகார் அளிக்கிறார் என எண்ணிய அன்பழகன்  சென்றாயபெருமாள் மற்றும் ஆசிரியையை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். அதேபோல் சம்பளமும் கொடுக்காமல் அவர்களை அலைக்கழித்துள்ளார்.

 

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டு ஆசிரியர்கள் இருவருக்கும் அரசிடம் இருந்து நேரடியாக சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த அன்பழகன், தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாள் உடன் தகராறு செய்ததோடு மாணவர்கள் முன்னிலையில் அவரை ஆபாசமாகப் பேசித் தாக்கியுள்ளார். பின்னர் ஆசிரியர் மற்றும் மாணவர்களையும் உள்ளே வைத்து பள்ளியை பூட்டிவிட்டுச் சென்று விட்டார்.

 

The teacher who assaulted the school headmaster; Students are shocked by the incident of imprisonment

 

இது குறித்து மாணவர்களிடம் விசாரித்த பொழுது மாணவர்கள், “தாளாளர் அன்பு சார் எங்க சார அடித்து தூக்கி போட்டுவிட்டு பூட்டு போட்டுவிட்டு போய்விட்டார்” என வேதனையோடு தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் காவல் அதிகாரிகளோடு வந்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தி அங்கிருந்து மாணவர்களை மீட்டுக் கொண்டு வந்தனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளியின் தாளாளர் அன்பழகன் தற்போது தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்