
கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் திருநாரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்துவருபவர் ஹசினா.
இவர், திருநாரையூர் கிராமம் முழுவதும் தெருதெருவாக சென்று தொடக்கப்பள்ளியில் கல்வி பயின்ற மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வி தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பாடத்தை மாணவர்கள் கண்காணிக்கிறார்களா என்றும் அதனை குறிப்பேட்டில் பதிவு செய்கிறார்களா என மாணவர்களிடம் கேட்டறிகிறார். பின்னர் மாணவர்களுக்கு பாடம் புரியவில்லையென்றால் அந்த பகுதியில் உள்ள மாணவர்களை ஒருங்கிணைத்து வீட்டிலே பாடம் நடத்துகிறார்.
மேலும் மாணவர்களுக்கு கரோனா தொற்று நோய் பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி மாணவர்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது. அப்படியே செல்ல நேரிட்டாலும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி வருகிறார். மேலும் தன்னலம் கருதாமல் மாணவர்கள் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு மாணவர்களின் வீட்டுக்கே சென்று பள்ளிக்கு மாணவர் சேர்க்கை செய்து வருகிறார். இந்த செயல் அந்த பகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.