/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/126_16.jpg)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள ஆலம்பூண்டியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு இடையிலான திறனறிவு தேர்வு போட்டி நடைபெற்றுள்ளது. அதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வந்து கலந்து கொண்டுள்ளனர். அதன் காரணமாக மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதுவதற்கு தேவையான மேஜை, நாற்காலிகள் பள்ளியில் இல்லாததால் அருகில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் இருந்து மேஜை நாற்காலிகளை தற்காலிக தேவைக்காக இரவல் பெற்றுள்ளனர். தேர்வு முடிவடைந்த நிலையில் இரவலாக பெறப்பட்ட மேஜை,நாற்காலிகளை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியிடம் மீண்டும் ஒப்படைப்பதற்காக ஆலம்பூண்டி பள்ளியில் இருந்து ஒரு விவசாய டிராக்டரில் இணைக்கப்பட்ட டிப்பரில் ஏற்றியுள்ளனர்.
அவை கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காகவும், அந்தப் பள்ளியில் கொண்டு போய் இறக்கி வைக்கும் பணிக்காகவும் சுமார் 10க்கும் மேற்பட்ட மாணவர்களை அந்த வாகனத்தில் ஏற்றி ஆசிரியர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.டிராக்டரில் நின்றபடி மேஜை நாற்காலிகள் சாலையில் விழுந்து விடாமல் இருப்பதற்காகபிடித்துக்கொண்டே மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். இது தொடர்பானவீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மாணவர்களை டிராக்டரில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வைத்ததற்காக ஆலம்பூண்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி, உடற்கல்வி ஆசிரியர் பழனி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தவும் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் பள்ளி மாணவர்களை பாதுகாப்பற்ற முறையில் அனுப்பி வைத்தது தவறாக இருக்கலாம். அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் மாணவ மாணவிகளைக் கொண்டு பள்ளியை கூட்டிப் பெருக்கியதற்காகவும், பள்ளி கழிவறையை சுத்தம் செய்வதற்காகவும் பள்ளி வளாகத்தில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தி தோட்டம் அமைத்ததற்காகவும் ஆசிரியர்கள் மீது கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)