Teacher qualification examination centers at a distance - examination writers lament!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டு, நிரப்பப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

Advertisment

பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளுக்கான தேர்வு 31-1-2023 லிருந்து 12-2-2023ஆம் தேதி வரை உள்ள தேதிகளில் நடத்தப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொள்பவர்கள், கணினி அடிப்படையிலான தேர்வு அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்குச் சென்று தேர்வு எழுதவேண்டும். இந்தத் தேர்வு மையங்கள் அமைந்திருக்கும் ஊர்களும் இடங்களும், தேர்வு எழுதுபவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகப் பலரும் புலம்புகின்றனர்.

Advertisment

உதாரணத்துக்கு, தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரியும் விருதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, ராஜபாளையம் – வெங்காநல்லூர், அய்யனார் கோவில் சாலை அருகிலுள்ள ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரி, தேர்வு மையமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விருதுநகரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ளது அந்த மையம், ராஜபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரிக்கு, ராஜபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து செல்வதற்கு பேருந்து வசதி எதுவும் இல்லை. கூடுதல் வாடகைக்கு ஆட்டோ பிடித்துத்தான் செல்ல வேண்டும். பிப்ரவரி 6-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் தேர்வுக்கு, காலை 7-30 மணிக்கு அந்த மையத்தில் ஆஜராகிவிட வேண்டும். காலை 8-15 மணிக்கெல்லாம் அந்தக் கல்லூரியின் கதவை அடைத்துவிடுவார்கள்.

 Teacher qualification examination centers at a distance - examination writers lament!

அந்தப் பெண் காலை 7-30 மணிக்குள் அந்த ராஜபாளையம் மையத்தில் இருக்க வேண்டுமென்றால்,விருதுநகரிலிருந்து அதிகாலை கும்மிருட்டில் அல்லவா கிளம்பவேண்டும்? அந்த நேரத்தில் பேருந்துதான் சரிவரக் கிடைக்குமா? அந்தப் பெண்ணால் சாப்பிடத்தான் முடியுமா? எத்தனை அவதிப்பட வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால், விருதுநகரில் இருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ள ஆமத்தூரில் உள்ள AAA பொறியியல் கல்லூரியும் ஒரு தேர்வு மையமாகச் செயல்படுவதுதான். விருதுநகரில் இருந்து வருபவர்களை, பக்கத்திலேயே உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதவைத்தால் வீண் அலைச்சலைத் தவிர்க்கமுடியுமே? அந்த அளவுக்கு மனிதநேய சிந்தனையுடன் இயங்கிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மனம் இல்லாதது ஏனோ?

Advertisment

2013 முதல் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60000-க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்றுவரையிலும் பணி நியமன ஆணை கிடைக்காத நிலையில், 2022-க்கான ஆசிரியர் தகுதித் தேர்வை இப்போது இவர்கள் எழுதினால் என்ன? எழுதாவிட்டால் என்ன? என்ற அலட்சியத்தாலோ என்னவோ, தேர்வு எழுதுபவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதத்தில் தேர்வு மையங்களை அமைத்திருக்கின்றனர்.

அந்தத் தேர்வு அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்களில் ஒன்று – தேர்வு மையத்தை மாற்றுவதற்கான எந்த கோரிக்கையும் எந்தச் சூழ்நிலையிலும் பரிசீலிக்கப்படமாட்டாது.

தேர்வு எழுதுபவர்களை அவஸ்தைக்கு உள்ளாக்கவேண்டும் என்பதில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அப்படியென்ன நிர்ப்பந்தமோ?